சென்னை: தகுதியான விண்ணப்பதாரர்கள் அனைவருக்கும் விரைவில் ரேஷன் அட்டை விநியோகம் செய்ய உணவுத்துறை சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டு வருவதாக உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் வெங்கட்ரமணன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் சுமார் 2.25 கோடி குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். அதேபோல், தமிழ்நாடு முழுவதும் 35,000 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. பொதுவிநியோகத் திட்டத்தின் கீழ் குடும்ப அட்டைத்தாரர்களுக்கு அரிசி, கோதுமை, சர்க்கரை, பருப்பு வகைகள் போன்றவைத் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.
அரசின் நிவாரணப் பொருட்கள் மட்டுமல்லாமல் குடும்ப அட்டையை வைத்தே மகளிர் உரிமைத்தொகையும் வழங்கப்பட்டு வருகிறது. மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பிப்பதற்கு குடும்ப அட்டை அவசியம் என்பதால் புதிய குடும்ப அட்டைக்கோரி இணையதளம் மூலம் விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியானவுடன் புதிய குடும்ப அட்டை தொடர்பான சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது முதலமைச்சர் விஜய் தலைமையில் புதிதாக தவெக அரசு அமைந்துள்ளது. இதையடுத்து, புதிய குடும்ப அட்டை விண்ணப்பிப்பது தொடர்பான சேவை மீண்டும் தொடங்கியுள்ளது.
புதிய அமைச்சர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள இலாக்காக்களில் அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து துறைச் சார்ந்த திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன.
அந்த வகையில் தமிழ்நாடு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் வெங்கட்ரமணன், துறைச் சார்ந்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். அப்போது, மாவட்டந்தோறும் உள்ள ரேஷன் பொருட்களின் இருப்பு நிலை, தரமான பொருட்களை பொதுமக்களுக்கு வழங்குவதை உறுதிச் செய்வது உள்ளிட்டவைக் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் இன்று (மே 20) சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் வெங்கட்ரமணன், “தமிழ்நாடு முழுவதும் சுமார் 4 லட்சம் ரேஷன் அட்டைகள் நிலுவையில் உள்ளது.
தகுதியான விண்ணப்பதாரர்கள் அனைவருக்கும் விரைவில் ரேஷன் அட்டை விநியோகம் செய்ய உணவுத்துறை சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அடுத்த ஓரிரு மாதங்களில் ரேஷன் அட்டை விநியோகிக்கும் பணியை முழுவதுமாக முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தகுதியான அனைவருக்கும் ரேஷன் அட்டை கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு. ப.வெங்கடரமணன் அவர்கள் கிண்டி, தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவனத்திற்கு நேரில் சென்று நிறுவன செயல்பாடுகள் மற்றும் நிர்வாக செயல்திறன்களை ஆய்வு செய்தார்.
[youtube-feed feed=1]