புற்றுநோய் மருந்துகளை மருத்துவமனைகள் கொள்முதல் விலையைவிட 10 மடங்கு வரை அதிக விலைக்கு விற்பனை செய்வது குறித்து உச்ச நீதிமன்றம் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது.

நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு, அனைத்து மருந்துகளுக்கும் ஒரே மாதிரியான 16% லாப வரம்பை நிர்ணயிப்பது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என தெரிவித்தது.

“ரூ.2,700-க்கு சில்லறை விற்பனையாளருக்கு வழங்கப்படும் புற்றுநோய் மருந்து, மருத்துவமனையில் ரூ.27,000 எம்ஆர்பி-யில் விற்கப்படுகிறது. இந்த 10 மடங்கு விலை உயர்வு ஏன்?” என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

மேலும், நோயாளிகள் மருத்துவமனையின் சொந்த மருந்தகத்திலோ அல்லது குறிப்பிட்ட மருந்தகத்திலோ மட்டுமே மருந்துகளை வாங்க வேண்டும் என கட்டாயப்படுத்தப்படுகிறார்களா என்பது குறித்தும் மத்திய அரசு ஆய்வு செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.

இதுபோன்ற நடைமுறைகள் சாமானிய மக்களுக்கும், அரசு மருத்துவத் திட்டங்களுக்கான செலவை ஏற்கும் வரி செலுத்துவோருக்கும் கூடுதல் சுமையை ஏற்படுத்துவதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

இந்த விவகாரம் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவதாகவும், இரண்டு வார கால அவகாசம் வழங்குமாறும் மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா தெரிவித்தார்.

இதையடுத்து, வழக்கின் அடுத்த விசாரணையை அக்டோபர் 12-ம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.