தேர்தல் ஆணையத்தின் (ECI) நடவடிக்கைகள் குறித்து, கடந்த 10 மாதங்களில் இரு தேர்தல் ஆணையர்கள் குறைந்தது 14 முறை அதிகாரப்பூர்வமாக ஆட்சேபம் தெரிவித்திருப்பது தெரியவந்துள்ளது.

பீகாரில் 2025 ஜூன் மாதம் தொடங்கப்பட்ட சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் (SIR), தற்போது நாடு முழுவதும் 30 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் வரைவு வாக்காளர் பட்டியல்களில் 13 கோடிக்கும் மேற்பட்ட பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.

இதனால், யார் வாக்களிக்க தகுதியானவர்கள் என்பதை முடிவு செய்யும் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்து நாடு முழுவதும் விவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், தேர்தல் ஆணையத்துக்குள்ளேயே இதுதொடர்பாக பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டிருப்பதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.

தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகிய இருவரும், கடந்த 10 மாதங்களில் குறைந்தது 14 முறை தேர்தல் ஆணையத்தின் சில முடிவுகள் மற்றும் உத்தரவுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதில் ஒரே நாளில் 4 முறை எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

தங்களுக்கு தெரியப்படுத்தாமல் சில முடிவுகள் எடுக்கப்பட்டதாகவும், சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

எதற்கு எதிர்ப்பு?

புதிய வாக்காளர்களை பட்டியலில் சேர்ப்பது, வாக்காளர்களின் பெயர்களை நீக்குவது, நீக்கப்பட்ட பெயர்களை மீண்டும் சேர்ப்பது, SIR நடைமுறையில் வாக்காளர்களை மீண்டும் சேர்க்கும் உத்தரவுகளுக்கு எதிராக மேல்முறையீடு செய்வது உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் தொடர்பாக இரு தேர்தல் ஆணையர்களும் ஆட்சேபம் தெரிவித்துள்ளனர்.

மேலும், நாடு முழுவதும் உள்ள வாக்காளர் பட்டியல்களின் பாதுகாப்பு மற்றும் அவற்றை யார் பொறுப்பில் வைத்திருப்பது தொடர்பாகவும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இவர்கள் எழுப்பிய அனைத்து முக்கிய ஆட்சேபங்களும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கும் அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது. சில கடிதங்கள் துணைத் தேர்தல் ஆணையர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளன.

ஒரு கடிதத்தில், தேர்தல் ஆணையம் தங்களது எழுத்துப்பூர்வ ஆலோசனையை மீறி நடவடிக்கை எடுத்துள்ளதாக சுக்பீர் சிங் சந்து குறிப்பிட்டுள்ளார். அந்த நடவடிக்கை “அனுமதியற்றது மற்றும் சட்டவிரோதமானது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆணையத்தின் ஐ.டி. கட்டமைப்பு

சமீபத்தில் தேர்தல் ஆணையத்தின் தேர்தல் பட்டியல் தொடர்பான தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பை கண்காணிக்கும் பணிகளில் மாற்றம் செய்யப்பட்டதாகவும், அதில் தங்களுக்கான கண்காணிப்பு அதிகாரம் குறைக்கப்பட்டதாகவும் சந்து மற்றும் ஜோஷி தெரிவித்துள்ளனர்.

இந்த மாற்றங்கள் தங்களுக்குத் தெரியாமல் செய்யப்பட்டதாகக் கூறி, இருவரும் தனித்தனியாக மத்திய அமைச்சரவை செயலருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

இதையடுத்து அந்த பணிப் பொறுப்பு மாற்றங்கள் ரத்து செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விவகாரங்களுக்குப் பின்னர், செப்டம்பர் 9ஆம் தேதி தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் இரு தேர்தல் ஆணையர்களும் இணைந்து கூட்டம் நடத்தியுள்ளனர். நான்கு மாத இடைவெளிக்குப் பிறகு நடைபெற்ற முதல் முழுமையான கூட்டம் இதுவாகும்.

தேர்தல் ஆணையத்துக்குள் அதிருப்தி?

தேர்தல் நடத்துவதற்கான அரசியலமைப்பு அதிகாரம் கொண்ட அமைப்பான தேர்தல் ஆணையத்துக்குள் இவ்வளவு முக்கியமான விவகாரங்களில் தொடர்ந்து ஆட்சேபங்கள் எழுந்திருப்பது குறிப்பிடத்தக்கதாக பார்க்கப்படுகிறது.

மூன்று தேர்தல் ஆணையர்களும் 2023ஆம் ஆண்டு சட்டத்தின் அடிப்படையில் மத்திய அரசால் நியமிக்கப்பட்டவர்கள். பிரதமர், மத்திய உள்துறை அமைச்சர் மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் இடம்பெறும் தேர்வுக் குழு மூலம் அவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

2024 மார்ச் மாதம் சுக்பீர் சிங் சந்து மற்றும் ஞானேஷ் குமார் தேர்தல் ஆணையர்களாக நியமிக்கப்பட்டபோது, தேர்வு நடைமுறை தொடர்பாக அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த காங்கிரஸ் கட்சியின் அதிர் ரஞ்சன் சௌத்ரி தனது எதிர்ப்பைப் பதிவு செய்திருந்தார்.

அதேபோல், 2025 பிப்ரவரியில் ஞானேஷ் குமார் தலைமைத் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டதற்கும், விவேக் ஜோஷி தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டதற்கும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.

தேர்தல் ஆணையம் பதில் அளிக்கவில்லை

இரு தேர்தல் ஆணையர்களும் எழுப்பிய ஆட்சேபங்கள் குறித்து செப்டம்பர் 21ஆம் தேதி தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தேர்தல் ஆணையத்திடம் கேள்விகள் எழுப்பியது. அவர்களின் கவலைகளை தீர்க்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றும் கேட்கப்பட்டது.

ஆனால், தேர்தல் ஆணையத்திடம் இருந்து எந்த பதிலும் கிடைக்கவில்லை.

சந்து மற்றும் ஜோஷியிடமும் இதுதொடர்பாக மின்னஞ்சல் மூலம் விளக்கம் கேட்கப்பட்டது. செப்டம்பர் 9ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் இந்த விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதா என்றும் கேள்வி எழுப்பப்பட்டது.

அவர்களிடமும் இதுவரை பதில் கிடைக்கவில்லை என தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.