சென்னை: ராகுல்காந்தியை தரக்குறைவாக பேசிய  திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மன்னிப்பு கேட்க வேண்டும் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

‘ எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அவர்களையும், எங்கள் மூத்த தலைவர்களையும் தொடர்ந்து தரக்குறைவாக பேசும் இந்த அரசியலை தி.மு.க தலைமையே ஊக்குவிக்கிறதா? என்ற கேள்வி எழுகிறது  என காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் சந்தேகம் தெரிவித்துள்ளார்.

முன்னதாக,  திமுக முன்னாள் அமைச்சரும் தற்போதைய திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினருமான அனிதா ராதாகிருஷ்ணன் தனது தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் பேசுகையில், எங்கள் கூட்டணியில் இருந்த காங்கிரஸ் கட்சி 27 தொகுதிகளில் போட்டியிட்டு ஐந்து தொகுதிகள் மட்டுமே வெற்றி பெற்றது. தற்போது உள்ள சூழலில் அந்த நடிகரைப் பற்றி பேசுவதை விட நம்மிடமிருந்து பிரிந்து சென்ற அந்த துரோகிகளை பற்றி பேச வேண்டாமா?

ராகுல் காந்தியை அடுத்த பிரதமர் என்று கூறிய எங்கள் தலைவரை மறைந்து விட்டீர்களா? அதை மறந்த காங்கிரஸ் துரோகிகளே, உங்களைப் போல் துரோகி நாட்டில் உண்டா? இனி ராகுல்காந்தி அடுத்த பிரதமர் என்று சொன்னால் அவர் எப்படி வர முடியும். ராகுல் காந்தி அவர்களே தமிழ்நாட்டு மக்கள் இனி உங்கள் முகத்தில் கருப்பை பூசுவார்களே தவிர இனி ஒரு காலமும் உங்களால் வெற்றி பெற முடியாது. உங்களது பாட்டி இந்திரா காந்தி அவர்களையே சந்தித்த திராவிட முன்னேற்ற கழகத்திற்கு எவ்வளவு பெரிய துரோகம் செய்து உள்ளீர்கள். எப்படி ஓடிப்போய் இந்த ஐந்து காங்கிரஸ் உறுப்பினர்களும் சேர்ந்தீர்கள். பொ** பயலாக இருந்தால் நீங்கள் தேர்தலுக்கு முன்பே நாங்கள் உங்களோடு கூட்டணி வைக்கவில்லை என்று கூற வேண்டியதுதானே என்று கடுமையாக சாடினார்.

இதற்கு காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் காட்டமாக பதில் கொடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்டுள்ளப் பதிவில், அமைச்சர் பதவியும் அதிகாரமும் போன பிறகு, விரக்தியிலும் அகங்காரத்திலும் சிலரின் மொழியின் தரம் எந்த அளவுக்கு கீழே விழுகிறது என்பதற்கான உதாரணம் தான் அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு.

“பொ“ என்று பேசுவது காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களை மட்டும் அல்ல, மூன்றாம் பாலினத்தவர்களையே இழிவுபடுத்தும் அருவருப்பான மனநிலையை காட்டுகிறது. சமூகத்தில் தங்களுக்கான மரியாதையும் அங்கீகாரமும் பெற போராடி வரும் ஒரு சமூகத்தை இப்படி கேவலப்படுத்துவது வெட்கக்கேடானது.

நாங்கள் உங்களை அதிகாரத்திற்கு கொண்டு வர உழைத்தவர்கள்தான். எங்களுக்கும் திருப்பி பேச தெரியும். அரசியலிலும் பதிலடி கொடுக்க தெரியும்.

ஆனால் இன்னும் அரசியல் நாகரிகத்தை மதித்து தி.மு.க தலைமையின் பதிலை காத்திருக்கிறோம்.

எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அவர்களையும், எங்கள் மூத்த தலைவர்களையும் தொடர்ந்து தரக்குறைவாக பேசும் இந்த அரசியலை தி.மு.க தலைமையே ஊக்குவிக்கிறதா? என்ற கேள்வி எழுகிறது.
தி.மு.க தலைமையிடம் ஒரு கேள்வி —  இந்த மொழியை நீங்கள் ஆதரிக்கிறீர்களா? இல்லையெனில் உடனடியாக கண்டிக்க வேண்டும். இல்லை என்றால், இதே அரசியல் மொழியில் உங்களுக்கு பதிலடி கொடுக்க நாங்களும் தயங்க மாட்டோம்.

அரசியலில் கருத்து வேறுபாடு இருக்கலாம். ஆனால் பெண்கள், மூன்றாம் பாலினத்தவர்கள், எதிர்க்கட்சியினர் மீது இழிவான வார்த்தைகள் பயன்படுத்துவது அரசியல் கலாச்சாரம் அல்ல.  அது அரசியல் நாகரிகத்தின் வீழ்ச்சி.

அனிதா ராதாகிருஷ்ணன் தனது வார்த்தைகளுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும்.  தி.மு.க தலைமையும் இதை வெளிப்படையாக கண்டிக்க வேண்டும்.

[youtube-feed feed=1]