சென்னை: முதல்வர் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படம் இணையதளத்தில் வெளியானது தொடர்பான புகாரில் கைது செய்யப்பட்டுள்ள 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

இணையவழி டிஜிட்டல் திருட்டு மற்றும் அறிவுசார் சொத்துரிமை மீறல்களுக்கு எதிராகத் தமிழக காவல்துறை எடுத்து வரும் அதிரடி நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக சென்னை சைபர் க்ரைம் தலைமையகம்  அறிவித்து உள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு காவல்துறை சைபர் கிரைம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அண்மையில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் சட்டவிரோத இணையக் கசிவு வழக்கில் தொடர்புடைய மூன்று முக்கிய நபர்கள் மீது குண்டாஸ் சட்டம் பாயந்துள்ளது.

வழக்கின் பின்னணி மற்றும் காவல்துறை விசாரணை

கடந்த 2026 ஏப்ரல் 11 அன்று ஆன்லைனில் ‘ஜனநாயகன்’ திரைப்படம் சட்டவிரோதமாக கசியவிடப்பட்டு, பரப்பப்பட்டது தொடர்பாக சென்னை சைபர் க்ரைம் பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

திரைப்படத் துறையினருக்கும் தயாரிப்பாளர்களுக்கும் பெரும் பொருளாதார இழப்பை ஏற்படுத்தும் இத்தகைய டிஜிட்டல் திருட்டுப் பின்னணியை உடைக்க, மாநில சைபர் க்ரைம் பிரிவு தீவிர விசாரணையில் இறங்கியது. தொடர் கண்காணிப்பு மற்றும் தொழில்நுட்ப ஆதாரங்களின் அடிப்படையில், இந்த இணையத் திருட்டுச் செயல்களின் பின்னணியில் ஒரு பெரிய வலையமைப்பு செயல்படுவது கண்டறியப்பட்டது.

பொது ஒழுங்கிற்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலும், திட்டமிடப்பட்ட டிஜிட்டல் திருட்டுச் செயல்களைத் தொடர்ந்து ஊக்குவிக்கும் வகையிலும் செயல்பட்டதால், இந்த வழக்கின் முக்கியக் குற்றவாளிகள் மூன்று பேர் மீது தமிழ்நாடு குண்டர்கள் தடுப்புச் காவல் சட்டத்தின் (Goondas Act) கீழ் தடுப்புக் காவல் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, எஸ். பிரஷாந்த், எஸ். செல்வம், எஸ். பாலா (எ) பாலகிருஷ்ணன் ஆகியோர்மீது  குண்டாஸ் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவர்கள் மீதான விசாரணையில் சேகரிக்கப்பட்ட டிஜிட்டல் மற்றும் தொழில்நுட்ப சான்றுகளின் தீவிரத்தன்மையை ஆராய்ந்த பின்னர், கடந்த 13.05.2026 அன்று இந்த தடுப்புக் காவல் உத்தரவுகள் முறைப்படி நிறைவேற்றப்பட்டு அவர்கள் சிறையிலடைக்கப்பட்டனர்.

காவல்துறை தரப்பில் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், கைதான மூவரும் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் அசல் பிரதியைத் திருடுவதிலும், அதனை இணையப் பயன்பாட்டிற்கு ஏற்ப சட்டவிரோதமாகச் செயலாக்குவதிலும் (Processing) முக்கியப் பங்காற்றியுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

அதுமட்டுமின்றி, பல்வேறு ஆன்லைன் தளங்கள், சமூக ஊடகக் குழுக்கள் மற்றும் டிஜிட்டல் சேனல்கள் மூலம் இத்திரைப்படத்தை பொதுமக்களுக்கு சட்டவிரோதமாக விநியோகம் செய்ததிலும் இவர்களுக்கு நேரடித் தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தச் செயலின் தீவிரத்தன்மையைக் கருத்தில் கொண்டு, எதிர்காலத்தில் இத்தகைய சட்டவிரோதச் செயல்கள் தொடர்வதைத் தடுக்கும் பொருட்டு இந்த கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு எச்சரிக்கை

இணையத் திருட்டு மற்றும் பைரசி (Piracy) நடவடிக்கைகளை முற்றிலும் ஒழிப்பதற்குப் பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் என்பதால், சைபர் க்ரைம் பிரிவு பின்வரும் ஆலோசனைகளையும் எச்சரிக்கையையும் விடுத்துள்ளது:

இணையதளங்களில் இருந்து திருட்டுத்தனமாகத் திரைப்படங்களைப் பதிவிறக்கம் (Download) செய்யவோ அல்லது ஆன்லைனில் பார்க்கவோ (Stream) கூடாது.

 வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமூக ஊடகங்கள் மூலம் திருட்டுப் படங்களின் லிங்க்குகளையோ அல்லது கோப்புகளையோ பிறருக்கு அனுப்பக் கூடாது.

டிஜிட்டல் திருட்டுச் செயல்களில் ஏதேனும் ஒரு வழியில் ஈடுபடுவதோ அல்லது அத்தகைய உள்ளடக்கங்களை முன்னெடுத்து பரப்புவதோ கடுமையான சட்ட விதிகளின்படி தண்டனைக்குரிய குற்றமாகும்.

பொதுமக்கள் தங்கள் கவனத்திற்கு வரும் இணையத் திருட்டுச் சம்பவங்கள் அல்லது சந்தேகத்திற்கிடமான லிங்க்குகள் குறித்து உடனடியாகப் புகார் அளிக்கக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புகார் அளிப்பதற்கான பிரத்யேக வழிமுறைகள்:

தேசிய சைபர் க்ரைம் போர்ட்டல்:பொதுமக்கள் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் புகார்களைப் பதிவு செய்யலாம்.

:சைபர் க்ரைம் தொடர்பான அவசர உதவிகளுக்கு1930என்ற கட்டணமில்லா உதவி எண்ணை உடனடியாகத் தொடர்பு கொள்ளலாம்.

திரைப்படத்துறை

திரைப்படத் துறையை முடக்கும் டிஜிட்டல் பைரசிக்கு எதிராக எடுக்கப்பட்டுள்ள இந்த அதிரடி நடவடிக்கை, இணைய வழித் திருட்டுகளில் ஈடுபடுபவர்களுக்கு ஒரு கடுமையான எச்சரிக்கையாக அமைந்துள்ளது. தொழில்நுட்ப வளர்ச்சியைத் தவறாகப் பயன்படுத்தி கலைப்படைப்புகளைத் திருடுபவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது சட்டம் தன் கடுமையான கடமையைச் செய்யும் என்பதை இந்த குண்டாஸ் சட்ட நடவடிக்கை தெளிவுபடுத்தியுள்ளது.

[youtube-feed feed=1]