சென்னை: இன்று முதல் 3 நாட்கள் தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு  உள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த சில தினங்களுக்குக் குளிர்ச்சியான சூழல் நிலவும் என்றும், கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தனியார் வானிலை ஆய்வாளர் ‘தமிழ்நாடு வெதர்மேன்’ பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி (யு.ஏ.சி) காரணமாகத் தற்போது கிழக்கிலிருந்து காற்று வீசி வருகிறது. இதன் காரணமாக அடுத்த 2 முதல் 3 நாட்களுக்குக் குளிர்ச்சியான மற்றும் இதமான வானிலை நிலவும். வரும் திங்கட்கிழமை வரை இந்தச் சூழல் நீடிக்கும் என்பதால் பொதுமக்கள் இந்த இதமான காலநிலையை அனுபவிக்கலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தில் கோடை வெப்பம் தணிந்து கடந்த சில நாட்களாகப் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், தற்போதைய காற்றின் திசை மாற்றம் மற்றும் மழையின் போக்கு குறித்துத் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தனது முகநூல் பக்கத்தில் விரிவான தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

இன்று  (சனிக்கிழமை) புதுச்சேரி, கடலூர், விழுப்புரம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மழை தொடர வாய்ப்புள்ளது.

சென்னை & புறநகர் (KTCC): சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மழை பெய்யுமா என்பது ‘ஹிட் ஆர் மிஸ்’ (Hit or Miss) என்ற நிலையிலேயே உள்ளது. இருப்பினும், செங்கல்பட்டு மாவட்டக் கடலோரப் பகுதிகளில் மழைக்கு அதிக வாய்ப்புள்ளது.

சென்னையில் ஒருசில இடங்களில் திங்கட்கிழமை வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி சென்னை – நெல்லூர் கடற்கரை அருகே வலுவிழக்கும் வரை இந்த வாய்ப்பு நீடிக்கும்.

அடுத்த வாரத்தில் காற்றின் திசை மாறப்போவதாக வெதர்மேன் எச்சரித்துள்ளார். வங்கக்கடல் கிளை வழியாகப் பருவமழை காற்று அந்தமான் கடலை நோக்கி வீசத் தொடங்கியுள்ளது. இதனால் அடுத்த வாரம் முதல் மேற்குத் திசையிலிருந்து காற்று வீசத் தொடங்கும்.

தமிழகத்தின் மற்ற உள் மாவட்டங்களிலும் நல்ல மழைக்கு வாய்ப்புள்ளது. குறிப்பாக கேரளா, கர்நாடகா மற்றும் பெங்களூரு ஆகிய பகுதிகளில் வரும் நாட்களில் மிகச் சிறப்பான மழை பெய்யக்கூடும் என அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

முன்னதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மற்றும் வரவிருக்கும் தென்மேற்கு பருவமழை காரணமாக, தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் இன்று முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் நிலவும் வானிலை மாற்றங்கள் குறித்துச் சென்னை வானிலை ஆய்வு மையம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அடுத்த 24 மணிநேரத்தில் தென்மேற்குப் பருவமழை தெற்கு வங்கக்கடலின் சில பகுதிகள், அந்தமான் மற்றும் நிக்கோபார் பகுதிகளில் தொடங்குவதற்கான சாதகமான சூழல் நிலவுகிறது. மேலும், தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தொடர்ந்து நீடித்து வருகிறது.

மாவட்ட வாரியான மழை முன்னறிவிப்பு

இன்று  (மே 16): விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை மற்றும் தேனி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

மே 17: திண்டுக்கல், தேனி, கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி ஆகிய மலை மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.

சென்னை நிலவரம்: சென்னையில் அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

வங்கக்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 60 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் பின்வரும் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்:

தமிழக கடலோரம்: மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகள் (மே 15 – 19 வரை).

வங்கக்கடல்: அந்தமான் கடல் மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதிகள்.

[youtube-feed feed=1]