திருவண்ணாமலை: கோவில்கள், கல்வி நிறுவனங்கள் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூட முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ள நிலையில், திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள டாஸ்மாக் கடையை மூட அதிகாரிகள் மறுத்துள்ளது, பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேலும், முதல்வரின் உத்தரவை மதிக்காத அதிகாரிகள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும், பக்தர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

கடந்த திமுக ஆட்சியின்போது, ஆன்மிக ஸ்தலங்கள், பள்ளிகள் போன்ற மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதால், பொதுமக்கள், மாணவ மாணவிகள் கடுமையான சிரமங்களை சந்தித்தனர். இதைடுத்து டாஸ்மாக் கடைகளை அகற்றக்கோரி பல முறை கோரிக்கை விடுத்தும், அதை அதிகாரிகள் நிறைவேற்றாத நிலையில், முதல்வர் விஜய் தலைமையிலான புதிய அரசு அமைந்ததும், ஆன்மிக ஸ்தலங்கள், கல்வி நிறுவனங்கள் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டார். இது பொதுமக்களிடையே பெரும் வரவற்பை பெற்றது.
ஆனால், அதிகாரிகள், பல பகுதிகளில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் கடைகளை மூட மறுத்து வருகின்றனர். இதனால் பொதுமக்கள் போராட்டம் நடத்தும் சூழலுக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில், திருவண்ணாமலையில், பக்தர்கள் கிரிவலம் செல்லும் பாதையான திருவண்ணாமலை காமராஜர் சிலை சந்திப்பு அருகே அமைந்துள்ள டாஸ்மாக் மதுக்கடை, தொடர்ந்து பக்தர்களுக்கும் பொதுமக்களுக்கும் பெரிதும் தொந்தரவாக உள்ள அந்த மதுக்கடையை மூட வேண்டும் என்பது நீண்ட கால கோரிக்கையாக இருந்து வருகிறது. இது கடந்த திமுக ஆட்சி காலத்திலும் கண்டுகொள்ளாத நிலையில், தற்போதைய விஜய் ஆட்சியிலும் கண்டுகொள்ளாத நிலை ஏற்பட்டுள்ளத.
தமிழ்நாடு முழுவதும் பள்ளிகள் மற்றும் வழிபாட்டுத்தலங்களுக்கு அருகே செயல்படும் 717 டாஸ்மாக் மதுக்கடைள் மூடப்படும் என புதிய அரசு அறிவித்திருந்த நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் மொத்தமுள்ள 206 மதுக்கடைகளில் போளூர் தாலுகா ஆத்துவாம்பாடி, கீழ்பென்னாத்தூர் தாலுகா பூதமங்கலம் ஆகிய இரண்டு மதுக்கடைகள் மட்டுமே தற்போது மூடப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில், பள்ளிகள் மற்றும் வழிபாட்டுத்தலங்களுக்கு அருகேயுள்ள 23 மதுக்கடைகளை மூட வேண்டும் என மாவட்ட நிர்வாகம் பரிந்துரைத்த நிலையில், தற்போது 2 மதுக்கடைகள் மட்டுமே மூடப்பட்டுள்ளன. முன்னுரிமை அடிப்படையில் திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் காமராஜர் சிலை சந்திப்புக்கு அருகே உள்ள டாஸ்மாக் மதுக்கடை மூடப்படும் என அனைவரும் எதிர்பார்த்தனர். அந்த மதுக்கடையை மூடாதது பக்தர்களிடையே ஏமாற்றத்தோடு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.
மணலூர்பேட்டை சாலையில் ஒரு தனியார் கல்லூரிக்கு அருகே அமைந்துள்ள டாஸ்மாக் கடையையும் மூட வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். அங்குள்ள விளைநிலத்தை திறந்தவெளி பார் போல நூற்றுக்கணக்கானோர் பயன்படுத்துவதால், கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் பெரிதும் பாதிக்கின்றனர். எனவே, கிரிவலப்பாதையில் உள்ள டாஸ்மாக் கடை மற்றும் கல்லூரிக்கு அருகேயுள்ள டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி விரைவில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள், பக்தர்கள் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
[youtube-feed feed=1]