கேரளாவில் வந்தே மாதரம் பாடலின் முழு பதிப்பும் இந்த வாழ்நாளில் பாடப்படாது என்று காங்கிரஸ் எம்.பி. ராஜ்மோகன் உன்னித்தான் தெரிவித்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை பேசிய அவர், வந்தே மாதரம் பாடலை முழுமையாக பாட வேண்டும் என்று தலைமைச் செயலாளர் உத்தரவிட்டதாக தனக்கு எந்த தகவலும் வரவில்லை என்றார்.
“இதுவரை எப்படி வந்தே மாதரம் பாடப்பட்டதோ, அதே முறையில்தான் இனியும் பாடப்படும். அதற்கு மேல் எதுவும் பாடப்படாது. பிரதமர் மோடி எங்களை சுட்டுக் கொல்வதாக மிரட்டினாலும், வந்தே மாதரத்தின் முழு பதிப்பையும் பாட மாட்டோம். இந்த வாழ்நாளில் அது நடக்காது” என்று அவர் கூறினார்.

மேலும், ஆளுநர் மாளிகைகள் தரம் குறைந்த அரசியலின் மையங்களாக மாறிவிட்டதாகவும், ஆளுநர்கள் பண பலத்தை பயன்படுத்தி ஜனநாயகத்தை சீர்குலைக்க முயற்சிப்பதாகவும் உன்னித்தான் குற்றம்சாட்டினார்.
“ஆளுநர்களிடம் இருந்து என்ன நியாயத்தை எதிர்பார்க்க முடியும்? அவர்கள் அனைவரும் மத்திய அரசின் ஆதரவாளர்களாக மாறிவிட்டனர்” என்றும் அவர் விமர்சித்தார்.
முழுமையாக வந்தே மாதரம் பாட உத்தரவு
கேரள தலைமைச் செயலாளர் பிஷ்வநாத் சின்ஹா, ஆகஸ்ட் 6-ம் தேதி வெளியிட்ட கடிதத்தைத் தொடர்ந்து இந்த விவகாரம் எழுந்துள்ளது.
2022-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ‘ஆசாதி கா அம்ரித் மகோத்சவ்’ நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக நடைபெறும் இந்த ஆண்டுக்கான ‘ஹர் கர் திரங்கா’ பிரசாரம், வந்தே மாதரம் தேசியப் பாடலின் 150-வது ஆண்டு கொண்டாட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளதாக அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஆகஸ்ட் 9 முதல் 17-ம் தேதி வரை நடைபெறும் நிகழ்ச்சிகளில் தேசியக் கொடியை ஏற்றுவது அல்லது காட்சிப்படுத்துவதுடன், அனைவரும் ஒன்றாக இணைந்து வந்தே மாதரம் பாடலை பாட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், வந்தே மாதரம் பாடல் தொடர்பாக மத்திய அரசு வழங்கியுள்ள வழிகாட்டுதல்களை முழுமையாக பின்பற்ற வேண்டும் என்றும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு கேரளாவில் ஆளும் கூட்டணியில் உள்ள சிபிஐ(எம்) கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வந்தே மாதரம் பாடலை முழுமையாக பாட வேண்டும் என்ற உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என்று அக்கட்சி வலியுறுத்தியுள்ளது.
மேலும், ஆர்எஸ்எஸ் அமைப்பின் கொள்கைகளுக்கு மாநில அரசு அடிபணிந்து வருவதாகவும் சிபிஐ(எம்) குற்றம்சாட்டியுள்ளது.