சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அடையாறு ஆற்றில் காணாமல் போன ஆர்பிஐ (RBI) ஊழியரைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
பாரிமுனை அருகே உள்ள ஆர்பிஐ அலுவலகத்தில் பணியாற்றி வந்தவர் எஸ். மோகன்குமார்.
30 வயதான இவர் கடந்த ஏப்ரல் மாதம் ஆன்லைன் வர்த்தகத்தில் அவர் சுமார் ரூ. 60 லட்சம் முதலீடு செய்திருந்தார்.

இதில் ரூ. 30 லட்சம் வங்கிக் கடன் மூலமாகவும், மீதமுள்ள ரூ. 30 லட்சம் நண்பர்களிடமிருந்து வாங்கியதாகவும் தெரிகிறது.
இதில் அவருக்குக் கணிசமான இழப்பு ஏற்பட்டதாகவும், அதனால் கடந்த சில நாட்களாக அவர் கடும் நிதி மற்றும் மன அழுத்தத்தில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
கடந்த புதன்கிழமை இரவு அடையாறு ஆற்றின் அருகே சுற்றித்திரிந்த நிலையில், இதுகுறித்து அவ்வழியாகச் சென்றவர்கள் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.
நந்தனம் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையைச் சேர்ந்த குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தேடுதல் பணியைத் தொடங்கினர்.
நள்ளிரவு வரை நீடித்த தேடுதல் பணி, நேற்றும் தொடர்ந்தது, கோட்டூர்புரம் காவல்துறையினர் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.