தொழில் திட்டங்களுக்கான அனுமதியை விரைவுபடுத்தும் வகையில், தரிசு நிலங்களை தொழில் பயன்பாட்டுக்கு மாற்ற இனி வேளாண்மைத் துறையின் தடையில்லா சான்று (NOC) பெற வேண்டிய அவசியம் இல்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக, தமிழ்நாடு விவசாய நிலத்தை விவசாயம் அல்லாத பயன்பாட்டுக்கு மாற்றும் விதிகளில் திருத்தம் செய்து, ஜூலை 31-ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு, தொழில் பயன்பாட்டுக்கு மாற்றப்பட உள்ள நிலம் குறைந்தது 3 ஆண்டுகளாக சாகுபடி செய்யப்படாமல் இருந்ததா என்பதை வேளாண்மைத் துறை இணை இயக்குநர் ஆய்வு செய்து, அனுமதி வழங்க வேண்டும்.

இதற்காக வருவாய்த்துறையின் அடங்கல் பதிவுகள், செயற்கைக்கோள் படங்கள் மற்றும் நில அளவை விவரங்கள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்ய வேண்டியிருந்ததால், அனுமதி பெறுவதில் காலதாமதம் ஏற்பட்டது.
தற்போது, இந்த ஆய்வை மாவட்ட அளவிலான நகர் மற்றும் ஊரமைப்புத்துறை (DTCP) அலுவலகமே மேற்கொள்ளும். இதன் மூலம் வேளாண்மைத்துறையிடம் தனியாக NOC பெற வேண்டிய நடைமுறை நீக்கப்பட்டுள்ளது.
புதிய விதிகளின்படி, விண்ணப்பதாரர் தாக்கல் செய்யும் ஆவணங்களை ஆய்வு செய்து திருப்தி அடைந்தால், DTCP இயக்குநரே நிலத்தை மாற்றுவது தொடர்பாக முடிவு எடுக்கலாம்.
மேலும், நில மாற்றம் தொடர்பான முடிவில் வேளாண்மைத்துறையின் அறிக்கையை கட்டாயமாக சேர்க்க வேண்டும் என்ற விதியும் நீக்கப்பட்டுள்ளது.
தொழில் வளர்ச்சி அதிகரிக்கும்
இந்த மாற்றம் தொழில் திட்டங்களுக்கான அனுமதி பெறும் காலத்தை கணிசமாக குறைக்கும் என்றும், குறிப்பாக 2 மற்றும் 3-ம் நிலை நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் தொழில் வளர்ச்சியை அதிகரிக்க உதவும் என்றும் தொழில் அமைப்புகள் தெரிவித்துள்ளன.
வேளாண்மைத்துறையின் NOC பெற வேண்டும் என்ற நடைமுறை 1990-களில் கொண்டு வரப்பட்டது. தற்போது அது நீக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது என்றும், இதன் மூலம் தொழில் திட்டங்களுக்கு விரைவாக அனுமதி கிடைக்கும் என்றும் இந்திய தொழில்துறை கூட்டமைப்பு (CII) தெரிவித்துள்ளது.
கட்டுமானத் துறையினரும், இந்த மாற்றத்தால் நில பயன்பாடு மாற்றத்துக்கான அனுமதி விரைவாக கிடைக்கும் என வரவேற்பு தெரிவித்துள்ளனர்.