மதரசாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடினால் வானம் இடிந்து விழாது: கல்கத்தா உயர்நீதிமன்றம் கருத்து
மதரசாக்களில் முழுமையான ‘வந்தே மாதரம்’ பாடலை கட்டாயம் பாட வேண்டும் என்ற மேற்கு வங்க அரசின் உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை விசாரித்த கல்கத்தா உயர்நீதிமன்றம், “‘வந்தே மாதரம்’ பாடினால் வானமே இடிந்து விழாது” என்று வாய்மொழியாக கருத்து தெரிவித்தது.
தலைமை நீதிபதி தபப்ரதா சக்ரவர்த்தி மற்றும் நீதிபதி பார்த்த சாரதி சென் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்தது.

விசாரணையின்போது, “என் மதத்தைச் சாராத ஒரு வாசகத்தைச் சொல்லச் சொன்னால் அதனால் என்ன ஆகிவிடும்? அதனால் நான் வேறு மதத்தைச் சேர்ந்தவராக மாறிவிடுவேனா?” என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
மேலும், “ஆயிரக்கணக்கான கிறிஸ்தவப் பள்ளிகளில் அனைத்து மாணவர்களும் இறைவனை நோக்கி பிரார்த்தனை செய்ய வேண்டும். அப்போது வேறு மதத்தைச் சேர்ந்த மாணவர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்களா?” என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், ‘வந்தே மாதரம்’ தேசியப் பாடலாக இருந்தாலும், அதை மதரசா மாணவர்களிடம் கட்டாயப்படுத்த முடியாது. தேசியக் கீதத்துக்கு தேசியப் பாடலை விட உயர்ந்த அந்தஸ்து உள்ளது என்று வாதிட்டார்.
இதற்கு நீதிமன்றம், “‘வந்தே மாதரம்’ பாடவில்லை என்பதற்காக யார்மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டதா? யாராவது இதுவரை பாதிக்கப்பட்டுள்ளார்களா?” என்று கேள்வி எழுப்பியது.
மாநில அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் தீரஜ் குமார் திரிவேதி, அரசின் நிலைப்பாட்டை அறிக்கையாக தாக்கல் செய்ய அவகாசம் கோரினார். மேலும், எந்த தண்டனை நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், வெறும் அச்சத்தின் அடிப்படையில் தடை உத்தரவு கோர முடியாது என்றும் வாதிட்டார்.
மற்றொரு மூத்த வழக்கறிஞர் கல்யாண் பந்தோபாத்யாய், 2025-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் ‘வந்தே மாதரம்’ விவகாரம் குறித்து நீண்ட நேரம் விவாதிக்கப்பட்டும் எந்தத் தீர்மானமும் நிறைவேறவில்லை. அப்படியிருக்க, இதுபோன்ற உத்தரவுகள் மூலம் அதை அமல்படுத்த முயற்சிக்கிறார்கள் என்று தெரிவித்தார்.
இதையடுத்து, மாநில அரசு தனது அறிக்கையை தாக்கல் செய்த பிறகு வழக்கை மீண்டும் விசாரிக்க நீதிமன்றம் ஒத்திவைத்தது.