ராமேசுவரம்: கடந்த திமுக ஆட்சியில் ராமேசுவரம் கோவிலில் இலவச லட்டு வழங்கியதில் ரூ.3½ கோடி மோசடி நடைபெற்றுள்ளது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக 6 அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.

கடந்த திமுக ஆட்சியில், அறநிலையத்துறை அமைச்சராக சேகர்பாபு இருந்து வந்தார். இந்த காலக்கட்டத்தில் பக்தர்களுக்கு பல்வேறு நலதிட்டங்கள், இலவச உணவு, இலவச லட்டு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு, அது விளம்பரப்படுத்தப்பட்டும் வந்தது. ஆனால், இதில் ஏராளமான முறைகேடுகள் நடைபெறுவதாக புகார்கள் எழுந்தன.
இந்த நிலையில், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் பக்தர்களுக்க கோவிலில் இலவச லட்டு வழங்கியதில் ரூ.3½ கோடி மோசடி நடைபெற்றுள்ளது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
உலகப்புகழ்பெற்ற ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். பக்தர்களுக்கு தினமும் இலவசமாக லட்டு பிரசாதம் கோவில் நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. இவை சரியான முறையில் வழங்கப்படுவது இல்லை என்ற புகார்களும் வந்தவண்ணம் இருந்தது.
இந்த நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், இலவச லட்டு வழங்கியதில் பெரும் மோசடி தொடர்பாக கோவில் இணை ஆணையர் செல்லத்துரை தலைமையில் கடந்த சில நாட்களாக தீவிரமாக விசாரணை நடைபெற்றது. இதில் ஊழல் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கோவில் இணை ஆணையர் செல்லத்துரை, ராமேசுவரம் கோவிலில் அரசு உத்தரவுப்படி நாள்தோறும் பக்தர்களுக்கு இலவசமாக லட்டு வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 2023-ம் ஆண்டு முதல் தற்போது வரை 3 ஆண்டுகளில் மட்டும் 22 லட்சத்து 71 ஆயிரம் லட்டுகள் வழங்கியதில் சுமார் ரூ.3 கோடியே 40 லட்சம் வரை மோசடி நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
இதுதொடர்பாக கோவில் பிரசாத பிரிவு பேஸ்கார் பஞ்சமூர்த்தி, பணியாளர் விக்ரம். பிரசாத கடையில் பணியாற்றிய சிவனேஸ்வரி, விற்பனையாளர் செல்வி, விற்பனை பிரசாத பிரிவு பொறுப்பாளர் லாவண்யா, இலவச லட்டு பிரிவு அம்பிகா ஆகிய 6 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். மேலும், தற்காலிக பணியாளர்கள் பிரபு ரவி, நித்தியானந்தம், பாலாஜி ஆகிய 3 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
இவ்வாறு அவர் கூறினார். இந்த மோசடி பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த மோசடிக்கு மூலக்காரணமாக இருந்தவர்கள் யார், இதற்கும் முன்னாள் அமைச்சர் சேகர்பாபுவுக்கும் தொடர்பு உண்டா, அவர்கள்மீது என்ன நடவடிக்கை என பக்தர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
[youtube-feed feed=1]