டெல்லி: புதுச்சேரி மாநிலத்தில் மக்கள்தொகை கணக்கெடுப்பு பணி ஜூன் 1-ந்தேதி முதல் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த கணக்கெடுப்பில் சேகரிக்கப்படும் அனைத்து தகவல்களும் முழுமையான ரகசியத்துடன் பாதுகாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நாடு முழுவதும் 2026 ஏப்ரல் முதல் மக்கள்தொகை கணக்கெடுப்பு எடுக்கும் பணி தொடங்கும் என்றும், 2027ல் மக்கள் தொகை கணக்கெடுக்கப்படும் மத்தியஅரசு தெரிவித்துள்ளது. இந்த கணக்கெடுப்பு பணி இரு கட்டங்களாக நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, முதல் கட்டமாக 2026 ஏப்ரல் முதல் செப்டம்பா் வரையில் வீடு பட்டியலிடுதல் மற்றும் வீட்டுவசதி கணக்கெடுப்பு பணிகள் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளின் வசதிக்கேற்ப 30 நாள்களுக்கு நடத்தப்படும். இதைத்தொடர்ந்து 2027ம் ஆண்டு ம டிஜிட்டல் முறையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக, தேர்தல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி, புதுச்சேரியில் ஏப்ரல் 1ந்தேதி முதல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து புதுச்சேரி கலெக்டர் குலோத்துங்கன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் , புதுவை அரசு, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை மூலம் கடந்த 25ந் தேதி வெளியிடப்பட்ட அரசாணையின் அடிப்படையில், வரவிருக்கும் இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு செயல்பாடுகளை சிறப்பாக முன்னெடுக்க பொதுமக்களின் கடமைகள் மற்றும் பொறுப்புகள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள்தொகை கணக்கெடுப்பு என்பது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பணியாகும். இந்த தரவுகள் தேசிய திட்டமிடல், கொள்கை வடிவமைப்பு மற்றும் நாடாளுமன்றம், சட்டமன்றம் மற்றும் உள்ளூராட்சி அமைப்புகளுக்கான தொகுதி வரையறை மற்றும் ஒதுக்கீடு போன்ற செயல்பாடுகளில் முக்கிய பங்காற்றுகின்றன.
மக்கள்தொகை கணக்கெடுப்பு 2027 இன் முதல் கட்டமாக வீட்டு பட்டியல் மற்றும் வீட்டு கணக்கெடுப்பு புதுவை யூனியன் பிரதேசத்தில் அட்டவணைப்படி நடைபெறும்.
பொதுமக்கள் தாங்களே se.census.gov.in என்ற இணையதளத்தின் மூலம் தகவல்களை பதிவுசெய்யும் , சுய கணக்கெடுப்பு வரும் மே 17-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை நடைபெறும்.
கணக்கெடுப்பு அலுவலர்கள் வீடுதோறும் சென்று தகவல்களை சேகரிக்கும் பணி ஜூன் 1-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை மேற்கொள்ளப்படும்.
இந்த கணக்கெடுப்பின்போது வீட்டு அமைப்பு, குடிநீர் வசதி, கழிப்பறை, சமையல் எரிபொருள், மின்சாரம் மற்றும் இணைய வசதி உள்ளிட்ட மொத்தம் 33 விவரங்கள் சேகரிக்கப்படும்.
மக்கள்தொகை கணக்கெடுப்பு சட்டம் 1948ன் படி, பொதுமக்கள் சில முக்கிய சட்டப்பூர்வ கடமைகளை கடைபிடிக்க வேண்டும்.
கணக்கெடுப்பு அலுவலர்கள் கேட்கும் கேள்விகளுக்கு உண்மையான மற்றும் துல்லியமான பதில்களை வழங்குவது கட்டாயமாகும்.
வீடுகளில் கணக்கெடுப்பு அலுவலர்கள் பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்க வேண்டும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
[youtube-feed feed=1]