2025-26 நிதியாண்டில் 10.83% என்ற இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி விகிதத்தைப் பதிவு செய்துள்ள தமிழ்நாடு தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக சாதனையை பதிவு செய்துள்ளது.

2024-25 நிதியாண்டில் இந்த வளர்ச்சி விகிதம் 11.19% ஆக இருந்தது. 2025-26 நிதியாண்டிற்கான தமிழகத்தின் இந்த வளர்ச்சி விகிதம், மற்ற எந்த மாநிலத்தையும் விட மிக உயர்ந்ததாக இருக்கக்கூடும்.

உத்தரப்பிரதேசம், பஞ்சாப் மற்றும் கேரளா உள்ளிட்ட 11 மாநிலங்கள் மற்றும் நான்கு யூனியன் பிரதேசங்களுக்கான தரவுகளை மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் இன்னும் வெளியிடவில்லை.

இருந்தபோதும், வளர்ச்சி விகிதத்தில் தமிழகம் வெளிப்படுத்தியுள்ள இந்தச் செயல்பாடு, தேசிய சராசரி வளர்ச்சி விகிதமான 7.4%-ஐ (அடிப்படை ஆண்டு: 2011-12) விட “மிகவும் அதிகமாக” உள்ளது.

தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் இரட்டை இலக்க வளர்ச்சியை எட்டியிருப்பது, மாநிலத்தின் வளர்ச்சிப் பாதையில் “ஒரு வலுவான கொள்கை கட்டமைப்பு, மீள்திறன் கொண்ட தொழில்துறை அடித்தளம், உறுதியான உள்கட்டமைப்பு மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய நிலையான வளர்ச்சிக்கான தொடர் அர்ப்பணிப்பு” ஆகியவற்றைச் சுட்டிக்காட்டுவதாக, சென்னை பொருளாதாரப் பள்ளியின் முன்னாள் இயக்குநரும் தமிழக அரசின் பொருளாதார ஆலோசகருமான கே.ஆர். சண்முகம் கூறியிருப்பதாக தி இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஐந்தாண்டு காலகட்டத்தில் (2021-22 முதல் 2025-26 வரை), மாநிலம் ஆண்டுக்குச் சராசரியாக 9.07% வளர்ச்சி விகிதத்தை எட்டியுள்ளது. இது முந்தைய ஐந்தாண்டு சராசரியான 5.21%-ஐ (2016-17 முதல் 2020-21 வரை) விட 3.86 சதவீதப் புள்ளிகள் அதிகம் என்பதோடு, கோவிட் பெருந்தொற்றுக்கு முந்தைய சராசரி வளர்ச்சியான 7.18%-ஐயும் (2014-15 முதல் 2018-19 வரை) விட 1.89 சதவீதப் புள்ளிகள் அதிகம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய மாநிலப் பொருளாதாரமாகத் திகழும் தமிழகத்தின், நடப்பு விலையிலான மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி (GSDP), 2024-25 நிதியாண்டில் ₹31.19 லட்சம் கோடியாக இருந்த நிலையில், 2025-26 நிதியாண்டில் ₹35.29 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இதன் மூலம் 13.16% என்ற “வலுவான வளர்ச்சி” விகிதம் பதிவு செய்யப்பட்டுள்ளது; இது இந்திய மாநிலங்களிலேயே மிக வேகமாக எட்டப்பட்ட வளர்ச்சியாகும்.

முந்தைய ஆண்டில் மூன்று முக்கியத் துறைகளின் செயல்பாடு குறித்துக் கேட்கப்பட்டபோது, ​​மாநிலத்தின் பொருளாதார விரிவாக்கத்திற்கு முதன்மை உந்துசக்தியாகத் திகழும் இரண்டாம் நிலைத் துறை (Secondary sector) ஏறக்குறைய 15% வளர்ச்சி விகிதத்தைப் பதிவு செய்துள்ளதாகவும்; சேவைத் துறை சுமார் 8.5% மற்றும் முதன்மைத் துறை (Primary sector) ஏறக்குறைய 6% வளர்ச்சியை எட்டியுள்ளதாகவும் அந்த மூத்த பொருளாதார நிபுணர் பதிலளித்தார்.

இரண்டாம் நிலை மற்றும் முதன்மை ஆகிய இரு துறைகளும் தேசிய சராசரியை விட உயர்ந்த விகிதத்தில் வளர்ந்துள்ளன. இம்முறை விவசாயத் துறையின் கூறில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், கடந்த இரண்டு ஆண்டுகளில் நிலவிய எதிர்மறை வளர்ச்சி விகிதத்திலிருந்து (2023-24-இல் -1.96% மற்றும் 2024-25-இல் -1.83%) ஒரு “குறிப்பிடத்தக்கத் திருப்பம்” ஏற்பட்டுள்ளது. 2025-26 ஆம் ஆண்டில், இத்துறை ஏறக்குறைய 9% வளர்ச்சியுடன் “வலுவான மீட்சியை” எட்டியுள்ளது.

கிடைக்கப்பெற்ற தரவுகளின்படி பார்த்தால், மாநிலத்தின் தனிநபர் வருமானம் (தற்போதைய விலையில்) தற்போது ₹4.08 லட்சமாக உள்ளது; இது கர்நாடகத்திற்கு (₹4.33 லட்சம்) அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் உள்ளது.

[youtube-feed feed=1]