மத்திய கிழக்கில் நிலவும் மோதல்களின் காரணமாக அங்கு இழந்த எரிசக்தி உற்பத்தியை மீட்டெடுக்க சுமார் இரண்டு ஆண்டுகள் ஆகும் என்று, சர்வதேச எரிசக்தி முகமையின் (IEA) தலைவர் ஃபாதிஹ் பிரோல் கூறியுள்ளார்.
வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், “இது நாட்டுக்கு நாடு மாறுபடும். உதாரணமாக, ஈராக்கில் உற்பத்தியை மீட்டெடுக்க சவுதி அரேபியாவை விட மிக அதிக காலம் பிடிக்கும்.

இருப்பினும், ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில், போருக்கு முந்தைய உற்பத்தி நிலைகளை மீண்டும் அடையச் சுமார் இரண்டு ஆண்டுகள் ஆகும் என்று நாங்கள் கணிக்கிறோம்,” என்று கூறினார்.
ஹோர்முஸ் நீரிணை நீண்ட காலத்திற்கு மூடப்பட்டிருப்பதன் விளைவுகளைச் சந்தை குறைத்து மதிப்பிடுவதாகவும் அவர் தெரிவித்தார்.
ஈரானில் போர் தொடங்குவதற்கு முன்பே, தங்கள் இலக்குகளை நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த எண்ணெய் மற்றும் எரிவாயு சரக்குக் கப்பல்கள் தற்போது அதன் இலக்கை அடைந்துவிட்டன வந்து என்றும், இது எரிசக்திப் பற்றாக்குறையின் தாக்கத்தைக் குறைக்க உதவியுள்ளதாகவும் அவர் கூறினார்.
“ஆனால் மார்ச் மாதத்தில் புதிய எண்ணெய் கப்பல்கள் எதுவும் ஏற்றப்படவில்லை. ஆசியச் சந்தைகளுக்கு எண்ணெய், எரிவாயு அல்லது எரிபொருட்களின் புதிய விநியோகங்கள் எதுவும் நடைபெறவில்லை.
இந்த இடைவெளி இப்போது வெளிப்படையாகத் தெரியத் தொடங்கியுள்ளது. ஹோர்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்படாவிட்டால், எரிசக்தி விலைகள் கணிசமாக உயருவதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும்.”
மார்ச் மாதத்தில் அவசரக்கால எண்ணெய் இருப்பிலிருந்து எண்ணெய் வெளியிட்டது போல, IEA மீண்டும் ஒருமுறை அவசரக்கால இருப்பிலிருந்து எண்ணெய் வெளியிடுமா என்ற கேள்விக்கு பதிலளித்த பிரோல் அவ்வாறு தேவைப்பட்டால் அது நிச்சயம் பரிசீலிக்கப்படும் என்று தெரிவித்தார்.
[youtube-feed feed=1]