சென்னை: திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானது.

கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் சிபிஐ-க்கு 6 தொகுதிகள் வழங்கப்பட்ட  நிலையில், தற்போது ஒரு தொகுதியை குறைத்து 5 தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில் திமுக தலைவர் ஸ்டாலினும், இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் வீரபாண்டியனும் கையெழுத்திட்டனர்.

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் தேதிகள் வெளியான நிலையில், கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கீடு செய்வதில்,  திமுக, அதிமுக கட்சிகள் தீவிரமாக பணியாற்றி வருகின்றன. இந்த முறை 4 முனை போட்டி நிலவி வரும் நிலையில்,  கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிப் பங்கீடு குறித்து அரசியல் கட்சிகள் தீவிர ஆலோசனைகளில் ஈடுபட்டு வருகின்றன.

குறிப்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தையை விரைவுபடுத்தி உள்ளதுடன் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கி வருகிறது. இந்த நிலையில், திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் தங்களுக்கு கூடுதல் தொகுதிகள் வேண்டும் என அடம்பிடித்தாலும், இந்தமுறை 23 கட்சிகளுடன் மெகா கூட்டணியை திமுக ஏற்படுத்தி உள்ளதால், கூட்டணி கட்சிகளுக்கு கடந்த முறை வழங்கியதை விட இந்தமுறை தொகுதிகள்  குறைக்கப்பட்டு வருகிறது.

ஏற்கனவே  இந்திய தேசிய காங்கிரஸ், மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (மதிமுக) ஆகிய கட்சிளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன.

காங்கிரஸ் கட்சி மட்டும் கடந்த தேர்தலை விட கூடுதல் தொகுதிகளை திமுகவிடம் இருந்து பெற்றுள்ளது.  மதிமுகவுக்கு நான்கு தொகுதிகள், மனிதநேய மக்கள் கட்சிக்கு இரண்டு தொகுதிகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மற்றும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு தலா இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி  கூடுதல் தொகுதிகளை கேட்டு பிடிவாதம் பிடித்த நிலையில், இன்று 5 தொகுதிகளை ஒதுக்கி ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. மேலும், மேலும்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகியவை இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை கோரி வருகின்றன. . இதனால் பேச்சுவார்த்தை இழுத்துக் கொண்டே வருகிறது.

கடந்த தேர்தலை விட இந்த தேர்தலில் அதிக கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள வேண்டும் என திமுக தலைமை கேட்டதாகவும், அதனால் கூட்டணிக்கு ஒப்பு கொண்டதாக கூறி இருக்கிறார் அந்த கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.

[youtube-feed feed=1]