சென்னை: தமிழ்நாட்டில் எரிவாயு தட்டுப்பாடு உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளதால், அரசு மருத்துவமனைகளில் விறகு, மின் அடுப்புகளை தயாராக வைக்க வேண்டும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தி உள்ளார்.

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் தாக்குதல் தீவிரமடைந்துள்ளதால், வளைகுடா நாடுகளில் பெரும் பதற்றம் நிலவுகிறது. மேலும், கச்சா எண்ணை போக்குவரத்துக்கு உதவிகரமாக இருந்து வரும் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியது. இதனால், இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கும் கச்சா எண்ணெய் விநியோகம் தடைபட்டுள்ளது. இதன் காரணமாக, இந்தியாவிலும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் என ‘கெயில்’ நிறுவனம் எச்சரித்துள்ளது. மேலும், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை சிலிண்டருக்கு ரூ.60 உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் பல பகுதிகளில் வணிக சிலிண்டர்களும் நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால், பல உணவகங்கள் விறகு அடுப்புகளை உபயோகப்படுத்தும் பணியில் இறங்கி உள்ளனர்.
இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், காஸ் தட்டுப்பாடு தொடர்பாக துறைச் செயலர், அனைத்து மருத்துவக் கல்லூரி டீன்கள், இணை இயக்குநர்கள், துணை இயக்குநர்கள், அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. இந்த வாரத்துக்கு காஸ் தட்டுப்பாடு பிரச்சினை இல்லை. கடுமையான தட்டுப்பாடு வரும்பட்சத்தில், இதற்கு மாற்று ஏற்பாடாக எலெக்ட்ரிக் ஸ்டவ், விறகு அடுப்புகள் போன்றவற்றை தயார் நிலையில் வைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக, சைதாப்பேட்டை எம்எல்ஏ தொகுதி வளர்ச்சி நிதி ரூ.1.15 கோடியில், சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள காத்திருப்புக் கூடத்தை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார். மேலும், முதல்வர் மருத்துவக் காப்பீட்டு திட்ட நிதியின் மூலம் இயன்முறை பயிற்றுநர் நியமிக்கப்பட்டு, ரூ.1.50 லட்சத்தில் புதிய இயன்முறை கருவிகளின் பயன்பாடு, யோகா – இயற்கை மருத்துவப் பிரிவுக்கு ஒரு மருத்துவர் மற்றும் ஒரு மருத்துவ உதவியாளருடன் கூடிய சேவையை தொடங்கி வைத்தார்.
[youtube-feed feed=1]