சென்னை: தமிழ்நாடு முழுவதும் மலேரியா, டெங்கு காய்ச்சல் பரவி வரும் நிலையில், மாநிலம் முழுவதும் கொசு உற்பத்தியை தடுக்க தமிழ்நாடு அரசு எடுத்த நடவடிக்கை என்ன? – என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. இதுகுறித்து தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில், குறிப்பாக சென்னை கோவை மதுரை போன்ற மாநகராட்சி பகுதிகளில் சுகாதார சீர்கேடுகள் காரணமாக கொசுக்கள் அதிகரித்துள்ளதால் பல்வேறு நோய்கள் பரவி வருகின்றன. குறிப்பாக 1. மலேரியா, 2. டெங்கு, 3. ஜிகா, 4. வெஸ்ட் நைல் எனப்படும் ஜாயின்ட் வலி, 5. சிக்குன்குனியா, 6. மஞ்சள் காய்ச்சல் எனப்படும் மஞ்சாள் காமாலைபோன்ற நோய்கள் அதிகரித்து காணப்படுகின்றன.
இந்த நிலையில், சென்னை கோட்டூர்புரத்தைச் சேர்ந்த விஜயராஜா என்பவர் உயர் நீதிமன்றத்தில், கொசுக்களை தடுப்பது தொடர்பாக பொதுநல வழக்க தாக்கல் செய்திருந்தார்.
அவரது மனுவில், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சமீபகாலமாக கொசுக்களின் உற்பத்தி பன்மடங்கு அதிகரித்து வருகிறது. கொசுக்கடியால் குழந்தைகளும், முதியோரும் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சாக்கடைகள் மட்டுமின்றி வீட்டுக்குள் தேங்கி கிடக்கும் கழிவு நீரிலும் கொசுக்களின் உற்பத்தி அதிகரித்து டெங்கு, மலேரியா, சிக்குன்குனியா போன்ற நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதேநிலைதான் தமிழகம் முழுவதும் உள்ளது.
எனவே, மழைநீர் வடிகால்கள், கழிவுநீர் கால்வாய்கள், கட்டுமானப் பகுதிகளில் தேங்கிக் கிடக்கும் கழிவுநீரை முறையாக அகற்றி தமிழகம் முழுவதும் கொசு உற்பத்தியைத் தடுக்கவும், வீரியமிக்க கொசுக்களை அழிக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கும், சென்னை மாநகராட்சிக்கும் உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடைபெற்றது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் கார்த்திகை பாலன் ஆஜராகி, கொசு உற்பத்தியால் தமிழகத்தில்தான் அதிகமான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன என்பது குறித்த புள்ளிவிவரங்களை சமர்ப்பித்தார்.
அதைத்தொடர்ந்து, தமிழகம் முழுவதும் கொசு உற்பத்தியைத்தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து தமிழக அரசும், சென்னையில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து சென்னை மாநகராட்சி நிர்வாகமும் 3 வார காலத்தில்பதில் அளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை தள்ளிவைத்துள்ளனர்.
[youtube-feed feed=1]