சென்னை: திமுக தலைமையிலான கூட்டணியில், மார்ச்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு ஒதுக்கிய தொகுதி எண்ணிக்கையில் திருப்தி இல்லை என அக்கட்சி செயலாளர் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபை தேர்தல் இன்னும் சில வாரங்களில் நடைபெற உள்ளது. விரைவில் தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் வெளியிடும் என எதிர்பார்க்கப் படுகிறது. இதற்கிடையில் திமுக தலைமையிலான கூட்டணியில் இதுவரை இல்லாத அளவுக்கு 21 கட்சிகள் இணைந்துள்ளன. இக்கட்சிகளுக்குதொகுதிகளை ஒதுக்கும் பணியில் திமுக தலைமை தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அது தொடர்பாக கூட்டணி கட்சிகளை அழைத்து பேசி வருகிறது.

திமுக கூட்டணியில் இதுவரை 3 கட்சிகளுக்கு அதிகாரப்பூர்வமாக தொகுதிப் பங்கீடு நிறைவடைந்து, ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இதுவரை மொத்தமாக 32 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் மீதமுள்ள 202 தொகுதிகளுக்கு இன்னும் 18 கட்சிகள் இடையே சீட் பகிர்வு நடைபெற உள்ளது.

அதாவது, திமுக, கூட்டணிக் கட்சிகளுடனான தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தையை கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி முதல் நடத்தி வருகிறது. காங்கிரஸ், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கொமதேக, மமக, ஐயூஎம்எல், விசிக, தவாக, மக்கள் விடுதலை கட்சி, மக்கள் நீதி மய்யம், எஸ்டிபிஐ, மஜக, முக்குலத்தோர் புலிப்படை, கொங்கு இளைஞர் பேரவை உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுடன் திமுக பேச்சுவார்த்தைக் குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர்.

இதில்,  காங்கிரஸ் கட்சிக்கு 28+1 திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 28 சட்டசபை தொகுதிகள் + 1 ராஜ்யசபா சீட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான தொகுதி உடன்பாடு ஒப்பந்தம் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் சென்னை அறிவாலயத்தில் கடந்த வாரம்  கையெழுத்தானது.  அதுபோல தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் மட்டும் பங்கீடு நிறைவடைந்துள்ளது. சட்டசபை தொகுதி எண்ணிக்கை இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

இதற்கிடையில்,  முஸ்லிம் லீக் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி ஆகிய 2 கட்சிகளுக்கும் தலா 2 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி 2 தொகுதிகளிலும் ஏணி சின்னத்திலும், மமக 2 தொகுதிகளில் திமுக சின்னத்திலும் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து,   “தி.மு.க-வில் அமைக்கப்பட்டுள்ள பேச்சுவார்த்தைக் குழுவுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பேச்சுவார்த்தைக் குழு இரண்டாம் கட்டமாக பேச்சுவார்த்தை நடைபெற்றது.  இதில் இரு தரப்புக்கும் இடையே உடன்பாடு ஏற்படவில்லை.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மார்சிஸ்டு  கம்யூ. மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், அவர்கள் (திமுக) ஒதுக்கீடு செய்ய உள்ள தொகுதிகளின் எண்ணிக்கையை சொல்லியிருக்கிறார்கள். அதில் எங்களுக்கு ஏற்பு இல்லை. கூடுதலான தொகுதிகள் வழங்க வேண்டும் என்பதை நாங்கள் வற்புறுத்தி இருக்கிறோம் என்றவர்,  அவர்கள் தலைமையோடு பேசிவிட்டு மீண்டும் பேசலாம் என்ற முறையில் பேச்சுவார்த்தை குழு தெரிவித்து இருக்கிறது. ஆகவே மீண்டும் நாளை பேச்சுவார்த்தை தொடரும் என்றார்.

இந்த முறை திமுக கூட்டணியில் நிறைய புதிய கட்சிகள்  சேர்ந்திருக்கிறார்கள் என்கிற ஒரு நியாயமான காரணத்தை தி.மு.க தரப்பிலிருந்து சொல்லியிருக் கிறார்கள். அது ஏற்கத்தக்க ஒன்றாக இருக்கிறது என்றாலும்,  நாங்கள் எதிர்பார்த்த கூடுதலான தொகுதிகளுக்கு வாய்ப்பில்லை என்ற நிலையில் கடந்த முறை போட்டியிட்டதை விட கூடுதலான தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்ற முறையில் நாங்கள்  மீண்டும்  வற்புறுத்தி இருக்கிறோம் என்றார்.

மேலும், இது தொடர்பாக,  அவர்கள் அவர்களுடைய தலைவரோடு பேசிவிட்டு மீண்டும் நாளை சந்திக்கலாம் என்று சொல்லி இருக்கிறார்கள்.  அதுகுறித்து நாளை தொடர்ந்து பேசுவோம்” என்று கூறினார்.

[youtube-feed feed=1]