இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் முன்னாள் தலைமை பயிற்சியாளருமான ராகுல் டிராவிட் மற்றும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி ஸ்பின்னரான அஸ்வின் ரவிச்சந்திரன் இணைந்து ஐரோப்பிய T20 பிரீமியர் லீக்கில் ஒரு அணியை வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிபிசி ஸ்போர்ட்ஸ் வெளியிட்ட செய்தியின் படி, இந்திய முதலீட்டாளர் குழுவுடன் சேர்ந்து இவர்கள் கிளாஸ்கோ அணியை வாங்க ஒப்பந்தம் செய்துள்ளனர். இந்த லீக்கில் மொத்தம் 6 அணிகள் இடம்பெற உள்ளன.

இந்த லீக் கிரிக்கெட் அயர்லாந்து, கிரிக்கெட் ஸ்காட்லாந்து மற்றும் ராயல் டச்சு கிரிக்கெட் அஸோஸியேஷன் ஆகிய கிரிக்கெட் வாரியங்களுடன் இணைந்து நடத்தப்படுகிறது.

39 வயதான அஸ்வின் 2024 டிசம்பரில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். மேலும் 2025 ஆகஸ்டில் IPL போட்டிகளிலிருந்தும் விலகினார். தற்போது உலகம் முழுவதும் நடைபெறும் பிராஞ்சைஸ் லீக் போட்டிகளில் விளையாட ஆர்வம் காட்டி வருகிறார்.

ஆஸ்திரேலியாவின் Big Bash League தொடரில் Sydney Thunder அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்திருந்தார். ஆனால் கடந்த ஆண்டு டிசம்பரில் சென்னை பயிற்சியின் போது முழங்காலில் ஏற்பட்ட காயத்தால் அந்த தொடரில் அவர் விளையாட முடியவில்லை. தற்போது அறுவை சிகிச்சைக்கு பிறகு சிகிச்சை பெற்று வருகிறார்.

ராகுல் டிராவிட் மற்றும் ஸ்காட்லாந்து கிரிக்கெட்டுக்கு நீண்டகால தொடர்பு உள்ளது. 2003ஆம் ஆண்டு Scotland national cricket team அணிக்காக வெளிநாட்டு வீரராக விளையாடியுள்ளார். அப்போது இங்கிலாந்தில் நடைபெற்ற கவுண்டி ஒருநாள் போட்டிகளில் 11 ஆட்டங்களில் விளையாடி 600 ரன்கள் எடுத்தார். அதில் 3 சதங்களும் அடங்கும்.

ஐரோப்பிய T20 லீக்கில் கிளாஸ்கோ அணி சமீபத்தில் விற்கப்பட்ட அணியாகும். இதற்கு முன்பு ஆம்ஸ்டர்டம், பெல்பாஸ்ட் மற்றும் எடின்பர்க் அணிகளை ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து முதலீட்டாளர்கள் வாங்கியுள்ளனர்.

மேலும் ரோட்டர்டாம் நகரத்தை மையமாகக் கொண்ட இன்னொரு அணியை விற்பனை செய்வதற்கான பேச்சுவார்த்தையும் இறுதிக்கட்டத்தில் உள்ளது. இந்த அணியை முன்னாள் தென் ஆப்பிரிக்க வீரர்கள் பிளெஸ்ஸிஸ், கிளாஸ்ஸன் மற்றும் ஜான்டி ரோட்ஸ் தலைமையிலான முதலீட்டாளர் குழு வாங்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த லீக்கில் அபிஷேக் பச்சன் கூட முதலீட்டாளராக உள்ளார். அவர் ரூல்ஸ் ஸ்போர்ட் டெக் என்ற இந்திய நிறுவனத்தின் மூலம் இதில் பங்கெடுத்துள்ளார்.

ஒரு அணியின் உரிமம் 10 ஆண்டுகளுக்கு சுமார் £11.1 மில்லியன் (சுமார் ரூ. 137 கோடி) மதிப்பில் விற்கப்பட்டுள்ளதாக தகவல். ஒவ்வொரு அணிக்கும் ஒரு சீசனுக்கு சுமார் £1.1 மில்லியன் சம்பள வரம்பு நிர்ணயிக்கப்படும்.

இந்த ஐரோப்பிய T20 பிரீமியர் லீக் போட்டியின் முதல் சீசன் ஆகஸ்ட் 26 முதல் செப்டம்பர் 20 வரை நடைபெற உள்ளது. அதே நேரத்தில் இங்கிலாந்தில் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடர் நடைபெற இருப்பதால் சில முன்னணி வீரர்கள் இதில் பங்கேற்க முடியாமல் போக வாய்ப்பு உள்ளது.

[youtube-feed feed=1]