பஹ்வான் சைபர்டெக் நிறுவனத்தில் $76 மில்லியன் (சுமார் ₹600 கோடி) இழப்பு ஏற்பட்டதாக கூறப்படும் விவகாரம் தொடர்பாக, அந்த நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி (CEO) துர்காபிரசாத் சண்முகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கில், நிறுவனத் தலைவர் ஷெய்கா ஹிந்த் சுஹைல் அல் முகைனி பஹ்வான் மீது அவர் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார்.

இந்த வழக்கை ஏற்று, தன்னை கட்டாயப்படுத்தி கையெழுத்து பெறப்பட்டதாக கூறப்படும் ‘செட்டில்மென்ட் ஒப்பந்தத்தை’ அமல்படுத்த வேண்டாம் என்று உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த 62 வயதான துர்காபிரசாத் சண்முகம், அண்ணா பல்கலைக்கழக முன்னாள் பொறியியல் மாணவர். அவர் பஹ்வான் சைபர்டெக் நிறுவனத்தின் இணை நிறுவுநராக இருந்து, கடந்த 26 ஆண்டுகளில் அந்த நிறுவனத்தை 50க்கும் மேற்பட்ட நாடுகளில் செயல்படும் அளவுக்கு வளர்த்ததாக கூறியுள்ளார்.
2021ஆம் ஆண்டு அவருக்கு ஒருவகை ரத்தப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டதாகவும், உடல்நிலை பாதிக்கப்பட்ட போதும் நிறுவன பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
2025 டிசம்பரில் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல வேண்டியிருந்த நிலையில், நிறுவனத் தலைவர் அழைத்ததால் அவர் Palm Jumeirah பகுதியில் உள்ள அவரது இல்லத்திற்கு டிசம்பர் 19 அன்று சென்றதாக குறிப்பிட்டுள்ளார்.
அங்கு சுமார் 8 மணி நேரம் நடந்த சந்திப்பில், பாதுகாப்பு ஊழியர்கள் தனது கைப்பேசிகளை எடுத்துக்கொண்டதாகவும், வெளியே செல்ல முடியாத சூழல் ஏற்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், “தனக்கு எதிராக குற்றப்பதிவு செய்து, UAE-யில் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது” என்று தலைவர் தெரிவித்ததாகவும், அதிர்ச்சியடைந்த நிலையில் $76 மில்லியன் இழப்புக்குப் பொறுப்பாகக் கூறி பல நிறுவனங்களில் இருந்த தனது பதவியும் பங்குகளும், குடும்ப சொத்துகளும் ஒப்பந்தத்தின் மூலம் விட்டுக்கொடுக்கச் செய்ததாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
அந்த ஒப்பந்தம் கட்டாயப்படுத்தி கையெழுத்து பெறப்பட்டதாக கூறி அதை செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என அவர் நீதிமன்றத்தில் கோரிக்கை முன் வைத்துள்ளார். மேலும், தனது லேப்டாப் மற்றும் கைப்பேசிகளில் இருந்த தரவுகள் எடுத்துக்கொள்ளப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக அவர் துபாயில் ஜனவரி 16, 2026 அன்று குற்றப்புகார் அளித்ததுடன், அமெரிக்காவின் Superior Court of California நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்நிலையில், எதிர் தரப்பு வழக்கறிஞர்கள், “ஒரே விஷயத்தில் பல நாடுகளில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது; இது தனக்கு சாதகமான நீதிமன்றத்தை நாடும் ‘forum shopping’ செயல் ஆகும்” என்று நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
இவ்வழக்கு குறித்து அடுத்த கட்ட விசாரணை மார்ச் 23 அன்று நடைபெற உள்ளது.
[youtube-feed feed=1]