சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் நீண்டநாளாக காத்திருந்த ஒரு பெரிய திட்டம் மீண்டும் தொடங்கியுள்ளது.

திருவான்மியூர் – உத்தண்டி இடையே 13.3 கி.மீ நீள உயர்மட்ட சாலை பணிக்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று அடிக்கல் நாட்டினார்.

தமிழகத்தில் இதுவரை இல்லாத மிக நீளமான நான்கு வழிச்சாலை உயர்மட்டப் பாலமாக, சென்னை நகரில் திருவான்மியூரில் இருந்து உத்தண்டி வரை 13.3 கிலோமீட்டர் நீளத்தில் அமைக்கப்பட உள்ள இந்த திட்டத்திற்கு சுமார் ₹2,100 கோடி செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது, ​​தமிழ்நாட்டின் மிக நீளமான மேம்பாலம் மதுரை (கோகலே சாலை) முதல் செட்டிகுளம் (7.3 கிமீ) தேசிய நெடுஞ்சாலை வரை உள்ளது.

இந்த புதிய உயர்மட்ட சாலை அமைக்கப்பட்டதும், தற்போது திருவான்மியூர்–உத்தண்டி இடையே செல்ல சுமார் 60 நிமிடம் ஆகும் பயண நேரம், 15 நிமிடமாக குறையும். மேலும் முக்கிய சந்திப்புகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலும் குறையும்.

சட்ட பிரச்சினையால் தாமதமான திட்டம் மீண்டும் தொடக்கம்

இந்த திட்டம் இரண்டு மாதங்களுக்கு முன்பு சட்ட பிரச்சினையால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. டெண்டர் வழங்கப்பட்டதை எதிர்த்து போபாலை தளமாகக் கொண்ட திலீப் பில்ட்கான் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றம் சென்றது. ஆனால் அந்த நிறுவனம் நீதிமன்றம் அறிவுறுத்தியபடி தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை ஆணையத்திடம் (TNSHA) மீண்டும் மனு அளிக்காததால், தற்போது ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட KNR கட்டுமான நிறுவனத்திற்கு அதிகாரப்பூர்வ பணியானை வழங்கப்பட்டுள்ளது.

திருவான்மியூர் ஜெயந்தி தியேட்டர் சந்திப்புக்கு அருகிலுள்ள மேற்கு அவென்யூ சாலையில் தொடங்கி உத்தண்டி டோல் கேட் அருகே முடிவடையும் இந்த உயர்மட்ட சாலை திருவான்மியூர் RTO, நீலாங்கரை, கொட்டிவாக்கம், வெட்டுவான்கேணி உள்ளிட்ட 13 அதிக நெரிசல் கொண்ட சந்திப்புகள் வழியாகச் செல்லும்

5.5 மீட்டர் உயரம் 17.25 மீட்டர் அகலத்தில் நடுவில் மீடியனுடன் கூடிய நான்கு வழிச்சாலையில் (4 lanes) நீலாங்கரை மற்றும் அக்கரையில் நுழைவு மற்றும் வெளியேறும் சாய்வுப்பாதைகளும் உத்தண்டி – திருவான்மியூர் வழித்தடத்தில் திருவான்மியூர் ஆர்டிஓ அருகே கூடுதலாக ஒரு வெளியேறும் சாய்வுப்பாதையும் அமைக்கப்பட உள்ளது.

இந்த திட்டம் பொதுத்துறை–தனியார் கூட்டாண்மை முறையில் (PPP) Hybrid Annuity Model மூலம் செயல்படுத்தப்படும். கட்டுமான செலவில் 40% தொகையை அரசு வழங்கும். மீதமுள்ள 60% தொகை பணிகள் முடிந்த பிறகு கட்டணமாக வழங்கப்படும். தற்போது இந்த உயர்மட்ட சாலையில் டோல் வசூல் செய்யும் திட்டம் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

2024 ஜூன் மாத ஆய்வின் படி, இஞ்சம்பாக்கம் சந்திப்பில் தினமும் சுமார் 68,923 வாகனங்கள் செல்கின்றன. எதிர்காலத்தில் 2054 ஆம் ஆண்டுக்குள் போக்குவரத்து மேலும் அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த கட்டுமானப் பணியின் போது மருந்தீஸ்வரர் கோவில் முதல் கொட்டிவாக்கம் வரையும், வெட்டுவாங்கேணி முதல் நீலாங்கரை வரையும் ECR-ல் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் இதை சமாளிக்கத் தேவையான நடவடிக்கைகளை போக்குவரத்து போலீசார் மேற்கொள்ள வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

[youtube-feed feed=1]