சென்னை: நான் திமுகவில் இணைந்து விட்டேன். கடந்த காலங்களைப் பற்றி கவலையே இல்லை. அதிமுகவுக்கு எதிர்காலமே இனி இல்லை,’ என்று திமுகவில் இணைந்த ஓபிஎஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

“அனைவரையும் அரவணைத்து செல்லும் வகையில் கட்சியையும், ஆட்சியையும் வழி நடத்துகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். சர்வாதிகாரமாக நடந்துகொள்ளும் எடப்பாடி பழனிசாமியால், எந்த காலத்திலும் இனி வெற்றிபெற முடியாது” என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.

திமுகவில் இணைந்தபின்னர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “அண்ணா ஆரம்பித்த தாய்க் கழகமான திமுகவில் மன மகிழ்ச்சி யுடன் இணைந்துள்ளேன். என்னை இணைத்துக்கொண்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

அண்ணா, கருணாநிதி காட்டிய வழியில் அனைவரையும் அரவணைத்து செல்லும் வகையில் கட்சியையும், ஆட்சியையும் மு.க.ஸ்டாலின்  வழிநடத்துவதை உணர்ந்து திமுகவில் இணைந்துள்ளேன்.

அரசியலில் இன்று சர்வாதிகாரியாக, ஆணவப் போக்குடன் நடந்துகொள்ளும் எடப்பாடி பழனிசாமி இனி வெற்றி பெற முடியாது. இந்த சூழலை அதிமுகவில் அவர் உருவாக்கியிருக்கிறார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு லட்சகணக்கான அதிமுக தொண்டர்கள், திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டிருக் கிறார்கள்.

நாடு திமுக தலைவர் ஸ்டாலினை உற்று நோக்குகிறது. அரசியல் கட்சியை எப்படி நடத்த வேண்டும் என்ற இலக்கணத்துடன் ஸ்டாலின் கட்சியை நடத்து கிறார். அனைத்து துறைகளிலும் சிறப்பான ஆட்சியை வழங்கி வருகிறார் மு.க.ஸ்டாலின்.

நல்லாட்சி, சிறந்த ஆட்சி, சீர்மிகு ஆட்சியை ஸ்டாலின் கொடுத்து வருவதை நாடு கவனித்து வருகிறது. தமிழக பெண்களுக்கான உதவிகளை செய்து வருகிறார். சட்டமன்ற வரலாற்றில் அண்ணா எப்படி அனைத்து உறுப்பினர்களுக்கும் எப்படி சம வாய்ப்பு கொடுத்தாரோ, ஸ்டாலினும் அதேபோல செயல்பட்டு வருகிறார்.

திராவிட நூற்றாண்டில் அதை அழிப்பதற்கான பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதை தடுத்து நிறுத்தி திராவிட இயக்கத்தை கட்டி காப்பதில், அண்ணா, கருணாநிதி வழியில் நின்று திராவிட சிந்தாத்தை காப்பதில் முன்னணியில் இருக்கிறார் ஸ்டாலின்.

அதிமுகவில் தற்காலிக பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி, அதிமுகவை அழிவு பாதைக்கு கொண்டு செல்கிறார். தென் மாவட்டங்களிலிருந்து எந்த ஒரு தலைவரும் வர கூடாது என்பதில் எடப்பாடி பழனிசாமி கவனமாக இருந்து, அங்கிருப்பவர்களை அழிக்க முனைப்பு காட்டுகிறார்.‘

நான் முதல்வராக பொறுப்பேற்றிருந்தபோது, கருணாநிதி என்னை ‘பச்சை தமிழர் பன்னீர் செல்வம்’ என பாராட்டினார். திராவிட இயக்கத்தையும், கொள்கையையும் காக்க திமுகவே தலைசிறந்த இயக்கம். திமுகவில் நான் ஒரு தொண்டனாக இணைந்திருக்கிறேன். திமுகவின் வளர்ச்சிக்கு பாடுபடுவேன். இது நான் சுயமாக சிந்தித்து எடுத்த முடிவு.

அனைவரையும் அரவணைத்து செல்லும் போக்கு அதிமுகவில் இல்லை. அது மறைந்துவிட்டது.

திமுக தீய சக்தி என்று நான் என்றைக்குமே சொன்னது கிடையாது. வரும் சட்டமன்ற தேர்தலில் மு.க.ஸ்டாலின் வாய்ப்பு கொடுத்தால் நிச்சயமாக போட்டியிடுவேன். மு.க.ஸ்டாலின் எடுக்கும் முடிவுக்கு என்றும் ஆதரவு கொடுப்பேன். கட்டுப்படுவேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். அதிமுகவுக்கு இனி எதிர்காலமே இல்லை.”

இவ்வாறு கூறினார்.

முன்னதாக, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி கே.பழனிசாமிக்கு இடையே ஒற்றுமை இல்லாத நிலையில், அதிமுக வெடித்த ஒற்றைத் தலைமை விவகாரத்தில் அதிமுகவில் இருந்து கட்சியிலும் சட்ட ரீதியாக ஓபிஎஸ் பின்னடைவை சந்தித்து வந்தார். இதையடுத்து கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார்.

இதையடுத்து அதிமுவில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், தன்னை கட்சியில் இருந்து நீக்கியது செல்லாது என்று நீதிமன்றம் மற்றும் இந்திய தேர்தல் ஆணையத்தை நாடிய நிலையில், தற்போதைய பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு சாதகமாக நீதிமன்ற தீர்ப்பு அமைந்தது. இதையடுத்து கடந்த 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (அதிமுக இல்லாத தேசிய ஜனநாயக கூட்டணி) இணைந்து ஓபிஎஸ் போட்டியிட்டார்.

இதனைத் தொடர்ந்து ஓபிஎஸ் அதிமுக தொண்டர்கள் மீட்புக் குழுவைத் தொடங்கி தனி அணியாகச் செயல்பட்டு வந்தார். இருப்பினும் அதிமுகவில் அடைக்கலம் தேடி தனது ஆதரவாளர்கள் மூலம் தூது அனுப்பிக் கொண்டே இருந்தார். ஒரு கட்டத்தில் எந்த நிபந்தனையும் இன்றி அதிமுகவில் சேர தயாராக இருப்பதாக அறிவிக்கைவிட்டும் ஓபிஎஸ்ஸை அதிமுகவில் சேர்க்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி சம்மதிக்கவே இல்லை.

தற்போது தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பாஜக – அதிமுக இணைந்து தேசிய ஜனநாயக கூட்டணியை அமைத்திருக்கும் நிலையில், அந்த கூட்டணியில் இருந்து விலகுவதாக கடந்தாண்டு ஓபிஎஸ் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து அதிமுகவில் இணைந்து செயல்பட விருப்பம் தெரிவித்து பலமுறை ஓபிஎஸ் கருத்து தெரிவித்திருந்தார். இந்த விவகாரத்தில் பாஜக பெரிதும் உதவிபுரியும் என்று நம்பியிருந்த ஓபிஎஸ்ஸை ஓரம் கட்டிவிட்டு அதிமுக தலைமையில் கூட்டணி அமைத்தது பாஜக. இதையடுத்து பாஜக கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் வெளியேறினார்.

இதனிடையே எடப்பாடி பழனிசாமி முதல்வர் வேட்பாளர் என அறிவிக்கப்பட்டதை விரும்பாத டி.டி.வி தினகரன் பாஜக கூட்டணியில் இருந்து ஒதுங்கி இருந்து வந்த நிலையில், நான் பாஜக தலைமையிலான கூட்டணியில் இணைகிறேன் என்று இணைந்து கொண்டார். ஓபிஎஸ் எந்தவித முடிவு எடுக்காத நிலையில் இவரை நம்பிக் கொண்டிருந்த எதுவும் நடக்காது என்ற முடிவுக்கு வந்த அவரது ஆதரவாளர்கள் ஒவ்வொருவராக கலைந்து சென்று திமுக, தாய்க் கட்சியான அதிமுக, தவெக என இணையத் தொடங்கினர்.

இந்த நிலையில் ஜெயலலிதா பிறந்த நாளன்று, தன்னை அதிமுகவில் இணைக்காவிட்டால்,   இனி நான் என்ன சங்கர மடத்துக்கு போவேன் என்று விரக்தியாக பேசினார். ஆனால் ஓபிஎஸை மீண்டும் அதிமுகவில் இணைக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று இபிஎஸ் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார். இதனால் அரசியல் அனாதை ஆனார் ஓபிஎஸ்.

இதனிடையே, தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதி இன்னும் ஓரிரு வாரங்களில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவாதால் தனது இறுதி முடிவை அறிவிக்கும் சூழலுக்கு ஓபிஎஸ் தள்ளப்பட்டார். கடந்த வாரம் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரின் இறுதி நாள் கூட்டத்தை அதிமுக புறக்கணித்த நிலையில் ஓபிஎஸ் மட்டும் பங்கேற்றார். கூட்டத்தின் முடிவில், சட்டப்பேரவை வளாகத்தில் முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை நடத்தினார். பின்னர், பேரவைத் தலைவர் அப்பாவுவையும் சந்தித்துப் பேசினார். பின்னர் அவரது மகனும், அதிமுக முன்னாள் எம்பியுமான ரவீந்திரநாத்தும் உடன் சந்தித்தார். இதையடுத்து இன்று (பிப்ரவரி 27ந்தேதி) திமுகவில் அடைக்கலம் அடைந்தார்

[youtube-feed feed=1]