சென்னை: காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, மார்ச் 5-ம் தேதி தமிழகம் வரவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. திமுக காங்கிரஸ் கூட்டணியில் சலசலப்புகள் எழுந்துள்ள நிலையில், ராகுல்காந்தி முதல்வர் ஸ்டாலினை சந்திப்பாரா என்றும் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. ராகுலின் தமிழ்நாடு வருகை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டின் தற்போதைய 16-வது சட்டமன்றத்தின் பதவிக்காலம் மே 2026-ல் முடிவடைகிறது. புதிய சட்டமன்றத்தைத் தேர்ந்தெடுக்க, 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதங்களில் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு பிப்ரவரி இறுதி அல்லது மார்ச் முதல் வாரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பணிகளை முடுக்கி விட்டுள்ளது.
தேர்தலையொட்டி, அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. திமுக, அதிமுக தலைமைகள், கூட்டணி களுடன் பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு போன்றவற்றை எநேரடியாகவும், மறைமுகமாகவும் மேற்கொண்டு வருகின்றன. இதற்கிடையில் புதிதாக களத்தில் இறங்கியுள்ள தவெகவுக்க, இளைஞர்கள் சமுதாயத்தின் ஆதரவு பெருமளவு உள்ளதால், தமிழக அரசியல் களம் தகிக்க தொடங்கி உள்ளது.
ஆட்சியை கைப்பற்ற அதிமுக பாஜக கூட்டணி ஒருபுறம் களத்தில் நிற்க, திமுக ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள கூட்டணி கட்சிகளின் பலத்தை கூட்டி உள்ளதுடன், பல்வேறு கவர்ச்சிகரமான இலவச அறிவிப்புகளை வெளியிட்டு, மக்களை கவர்ந்து வருகிறது.
இதற்கிடையில், அதிமுக பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணிக்கு ஆதரவு திரட்டுவதற்காக மார்ச் 1-ம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வர உள்ளார். மேலும் அவர் திருப்பரங்குன்றம் சென்று சுவாமி தரிசனம் செய்வார் எனக் கூறப்படுவதால் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.
இந்தச் சூழலில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், தற்போதைய லோக்சபா எதிர்க்கட்சி தலைவருமான ராகுல்காந்தி வரும் மார்ச் 5ந்தேதி தமிழ்நாடு வருகை தர உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
திமுக கூட்டணியில் காங்கிரஸ் தொடர்ந்து வரும், சில தலைவர்களின் அதிகாரப் பகிர்வு பேச்சு கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளதால், திமுக தலைமை இதுவரை காங்கிரஸ் கட்சியை பேச்சுவார்த்தைக்கு அழைக்காமல் இழுத்தடித்து வருகிறது.. இதனால் காங்கிரஸ் தலைவர்கள் சிலர் அதிருப்தியில் உள்ளனர்.
இதனால், காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி வேணுகோபால் அவசரம் அவசரமாக தமிழ்நாடு வருகை தந்த திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து பேசினார். ஆனால், அவரது பேச்சுவார்த்தைக்கு பிறகும் திமுக இதுவரை தொகுதி பங்கீடு குறித்து பேச காங்கிரஸ் கட்சியை அழைக்கவில்லை. இரு கட்சிகளுக்கு இடையே இழுபறி நீடிக்கிறது.
இப்படியான பரபரப்பான சூழலில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கரும், தவெக கூட்டணி அமைக்க காத்துக்கொண்டிருக்கிறது என கூறி கூட்டணிக்குள் மேலும் குழப்பதை ஏற்படுத்தி உள்ளளார். இது மேலும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், மார்ச் 5-ம் தேதி ராகுல் காந்தி சென்னை வருவதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
அன்றைய தினம் முதல்வர் ஸ்டாலினை சந்திக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், அன்று மாலை, காங்கிரஸ் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொதுக்கூட்டத்தில் ராகுல் பேசுவார் எனக் கூறப்படுகிறது. அந்த பொதுக்கூட்டத்தில் ஒரு லட்சம் தொண்டர்கள் கலந்து கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
திமுக-வுடனான பேச்சுவார்த்தை நிறைவடைந்த பிறகு சோனியா காந்தி, கார்கே, ராகுல், பிரியங்கா என அனைத்து தலைவர்களும் தமிழகம் வந்து பிரச்சாரம் செய்ய உள்ளதாகக் கூறப்படுகிறது.
[youtube-feed feed=1]