கோவை: திமுக இளைஞரணி மேற்கு மண்டல கூட்டம் கோவையில் வரும் பிப்ரவரி 22 ஆம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

கோவையில் வரும் பிப்ரவரி 22 ஆம் தேதி திமுக இளைஞர் அணி மேற்கு மண்டல கூட்டம் நடைபெற உள்ளது. திருவண்ணாமலை, விருதுநகரைத் தொடர்ந்து அடுத்ததாக கோவையில் திமுக இளைஞர் அணி கூட்டம் நடைபெற இருக்கிறது. துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இந்த கூட்டமானது நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

திருவண்ணாமலை திமுக இளைஞரணி மாநாட்டில் 91 தொகுதிகளைச் சேர்ந்த திமுக நிர்வாகிகள் பங்கேற்றனர். அதே போல விருதுநகர் திமுக இளைஞரணி மாநாட்டில் 58 தொகுதிகளைச் சேர்ந்த திமுக நிர்வாகிகள் பங்கேற்றனர். அதனைத் தொடர்ந்து வரும் பிப்ரவரி 22 ஆம் தேதி கோவையில் இளைஞரணி கூட்டம் நடைபெற இருக்கிறது.

இது தொடர்பாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்  தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘இயக்கத்தின் இதயமாம் நம் திமுக இளைஞரணியின் மேற்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு, கோவையில் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், அந்த மண்டலத்துக்கு உட்பட்ட 14 கழக மாவட்டங்கள், 39 சட்டமன்றத் தொகுதிகளை சேர்ந்த மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள்- சட்டமன்ற- நாடாளுமன்ற உறுப்பினர்கள்- மாவட்ட-மாநகர கழகச் செயலாளர்கள் – இளைஞர் அணித் துணைச் செயலாளர்கள் மற்றும் மாவட்ட அமைப்பாளர்- துணை அமைப்பாளர்கள் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டத்தை, இன்றைய தினம் காணொலிக் காட்சி வாயிலாக நடத்தினோம்.

நிர்வாகிகள் சந்திப்புக்காக மேற்கொள்ளவேண்டிய போக்குவரத்து-உணவு-குடிநீர் வசதிகள், அடையாள அட்டை- வெண் சீருடை தயாரிப்பு உள்ளிட்ட ஆயத்தப் பணிகள் குறித்து, மாவட்டக் கழகச் செயலாளர்களிடம் கலந்தாலோசித்து, வடக்கு மற்றும் தென் மண்டல நிர்வாகிகள் சந்திப்பை போல், இதுவும் வெற்றிச் சந்திப்பாக அமைந்திடும் வகையில், பணியாற்றுமாறு கேட்டுக் கொண்டோம்.

மேற்கு மண்டலத்தில் கழகத்தின் வலிமையை நிலைநாட்டும் ஒன்றாக இந்த இளம் நிர்வாகிகள் சந்திப்பு நிச்சயம் அமையும் என்று பதிவிட்டு உள்ளார்.

[youtube-feed feed=1]