சென்னை: தமிழ்நாட்டில், அரசு நடத்தும்,  மேல்நிலை மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் லாகரத்மிக் புக், கால்குலேட்டர், ஸ்கிரைப் நியமனத்தில் புது நடைமுறை உள்ளிட்ட மாற்றங்கள் அறிமுகம் செய்து பள்ளி கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

முன்னதாக சென்னை, அண்ணாசாலை, தேவநேயப் பாவாணர் மாவட்ட மைய நூலக முதல் தள அரங்கில்   திங்கட்கிழமை ( 16.02.2026) நண்பகல் 12 மணியளவில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து,   மேல்நிலை மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள், 2026 புதிய நடைமுறைகள் அமலுக்கு வர உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதன்படி,  மார்ச் / ஏப்ரல் 2026-இல் நடைபெறவுள்ள மேல்நிலை /இடைநிலை பொதுத் தேர்வு தொடர்பாக அனைத்து இணை இயக்குநர்கள் / துணை இயக்குநர்கள் / அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக்கல்வி/ இடைநிலை /தனியார் பள்ளிகள்) மற்றும் அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர்களுக்கான ஆய்வுக் கூட்டமும் மற்றும் முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான கல்விசார் ஆய்வுக் கூட்டமும் நடைபெற்றது. அதில் கீழே வரும் முடிவுகள் எடுக்கப்பட்டு உள்ளன.

மடக்கைப் புத்தகங்கள்

மேல்நிலைத் தேர்வில் இயற்பியல், வேதியியல் கணிதம், வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் பாடங்களில் தேர்வெழுதும் தேர்வர்களுக்கு பெரிய எழுத்துக்களில் “A4” அளவிலான மடக்கைப் புத்தகங்கள் (Logarithmic books) 20,000 எண்ணிக்கையில் வழங்கப்படவுள்ளது.

கால்குலேட்டர் வசதி

இவ்வாண்டு முதல் கணக்குப் பதிவியல் பாடத்திற்கும் தேர்வர்கள் “Ordinary Calculator without Programming” கால்குலேட்டர் வழங்கப்பட்டுள்ளது.

தேர்விற்கு வருகைபுரிந்த மாணாக்கர்களுக்கு வினாத் தாட்கள் வழங்கிய பின்னர். ஒவ்வொரு தேர்வறையிலும் மீதமுள்ள வினாத்தாட்களை தேர்வறைக் கண்காணிப்பாளர்களே மாணவர்கள் முன்னிலையில் உறையிலிட்டு சீலிடும் முறை நடைமுறைப்படுத்தப்படுகிறது. இந்நடைமுறை காரணமாக, வினாத்தாட்களின் பாதுகாப்புத் தன்மை மேலும் பலப்படுத்தப்படுகிறது.

ஸ்கிரைப் நியமனம்

“சொல்வதை எழுதுபவர்” சலுகையினைப் பயன்படுத்தும் மாற்றுத் திறனாளித் தேர்வர்களுக்கு வழங்குவதற்கென 5 வினாத்தாட்கள் கொண்ட வினாத்தாள் உறை அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்நடைமுறை காரணமாக, வினாத்தாட்களின் மந்தணத்தன்மை மேலும் பலப்படுத்தப்படுகிறது.

தேர்வுப் பணிகளில் ஆசிரியர்களை முழுமையாக ஈடுபடுத்தும் பொருட்டு, சொல்வதை எழுதுபவர் நியமனங்களில், B.Ed., / DIET/ கலைக் கல்லூரிகள்/ தொழில்நுட்பக் கல்லூரிகளில் இரண்டாமாண்டு பயிலும் மாணாக்கர்கள் மற்றும் இல்லம் தேடிக் கல்வி ஆசிரியர்களைத் தன்னார்வலர்களாக நியமிக்கும் முறை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. மேலும், இம்மாணாக்கர்களுக்கு பயிற்சியும் வழங்கப்பட்டு வருகிறது.

இருப்பிட முகவரி சரிபார்ப்பு

இவ்வாண்டு நேரடி தனித் தேர்வர்கள் இருப்பிட முகவரி உறுதி செய்யவும், சார்ந்த மாவட்டங்களில் விண்ணப்பித்தலை உறுதி செய்யவும் ஆதார் அட்டை சரிபார்க்கப்பட்டு விவரங்கள் பதிவேற்றம் செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது என்றும் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

[youtube-feed feed=1]