சென்னை: மகா சிவராத்திரியை முன்னிட்டு, சென்னையில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சிவபெருமானுக்கு கொண்டாடப்படும் மிக முக்கியமான விரதங்களுள் மகா சிவராத்திரி விரதமும் ஒன்றாகும். அந்த வகையில் மகாசிவராத்திரி என்பது சிவபெருமானின் பரிபூரண அருளைப்பெற மிகவும் முக்கியமான நாளாகும். இவ்விரதம் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் வரும் கிருஷ்ணபட்ச (தேய்பிறை) சதுர்த்தசி திதி கூடும் இரவில் கொண்டாடப்படும். உலகம் முழுவதும் உள்ள சிவாலயங்களில் மகா சிவராத்திரி வெகு விமர்சையாக கொண்டாடப்படும். அன்று ஒருநாள் இரவு சிவ பக்தர்கள் கண் விழித்திருந்து இறைவனை வழிபாடு செய்வார்கள்.

சிவராத்திரி என்பது பார்வதி தேவி சிவனை வழிபட்டு, இரவு முழுவதும் பூஜை நடத்திய நான் என கதை கூறுகிறது. இந்த நாளில் சிவனை வழிபடுவதன் மூலம், பல பிறவிகளில் செய்த பாவங்களிலிருந்து விடுதலை பெற முடியும் என்றும், மன அமைதி மற்றும் ஆன்மிக சக்தியை அதிகரிக்க முடியும் என்றும் கூறப்படுகிறது. இந்த நாட்களில் சிவ ஆலயங்கள் உள்பட பல ஆலயங்களில் இரவு முழுவதும் பூஜைகள் உள்பட பல்வேநு பக்தி நிகழ்வுகள் நடைபெறும். இதையொட்டி ஏராளமான பக்தர்கள்கோவில்களுக்கு செல்வார்கள்.

இந்த நிலையில், தெற்கு ரயில்வே  மகா சிவராத்திரியை முன்னிட்டு, பயணிகளின் வசதிக்காகச் சென்னை எழும்பூர் மற்றும் சென்ட்ரலில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாகத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னை – கன்னியாகுமரி இடையேயான சிறப்பு ரயில், இரவு 11.45 மணிக்கு எழும்பூரில் இருந்து புறப்பட்டு, நாளை மதியம் 1 மணிக்குக் கன்னியாகுமரியைச் சென்றடையும். மறுமார்க்கமாக பிப்ரவரி 16ஆம் தேதி திங்கட்கிழமை இரவு 9.35 மணிக்குக் கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்டு, செவ்வாய் காலை 10.15-க்குச் சென்னை கடற்கரையை வந்தடையும்.

இதேபோல், சென்னை – கொல்லம் இடையேயான சிறப்பு ரயில், இன்று இரவு 11.55 மணிக்குச் சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு, நாளை மாலை 4.30 மணிக்குக் கொல்லம் சென்றடையும். மறுமார்க்கமாக வருகிற 16ஆம் தேதி மாலை 6.30 மணிக்குக் கொல்லத்தில் இருந்து புறப்பட்டு, செவ்வாய் காலை 10.30-க்குச் சென்னை சென்ட்ரலை வந்தடையும்.

சிவராத்திரி கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு இயக்கப்படும் இந்த ரயில்களுக்கான முன்பதிவுகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

[youtube-feed feed=1]