2025-ம் ஆண்டு யாத்திரை காலம் முடிந்த பின், வெள்ளியங்கிரி மலைப் பாதையில் இருந்து அகற்றப்பட்ட கழிவுகளில் சுமார் 99% மறுசுழற்சி செய்ய முடியாதவை என்பது தெரிய வந்துள்ளது.
இதனால், பக்தர்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும், வனத்துறை தனது கண்காணிப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
வெள்ளியங்கிரி மலை பாதுகாப்பு அமைப்பு தன்னார்வலர்கள் 6.5 கி.மீ நீளமான நடைபாதையில் சிறப்பு தூய்மை பணிகளை மேற்கொண்டு, 2025-ல் மட்டும் 28 டன் கழிவுகளை அகற்றினர்.

ஒருமுறை பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக், பாலிதீன் பைகள், தண்ணீர் பாட்டில்கள், கைவிடப்பட்ட துணிகள், ஸ்நாக்ஸ்-சாக்லேட் கவர்கள் போன்றவை இதில் அடங்கும்.
மண் ஒட்டியிருந்ததாலும், பல அடுக்கு பிளாஸ்டிக் (MLP) இருந்ததாலும், இந்த கழிவுகளில் பெரும்பாலானவை மறுசுழற்சி செய்ய முடியவில்லை.
அவை RDF (Refuse-Derived Fuel) ஆக மாற்றப்பட்டு சிமெண்டு தொழிற்சாலைகளுக்கு அனுப்பப்பட்டதாக, இந்த முயற்சியில் ஈடுபட்ட Recompose Recycling Private Limited நிறுவனத்தின் நிறுவனர் தெரிவித்ததாக தி இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், ஆறாவது மலையில் உள்ள ‘ஆண்டி’ சுனையில் குளிக்கும் பக்தர்கள் கைவிடும் துணிகளும் RDF ஆக மாற்றப்பட்டன. உடைகளைக் கைவிட வேண்டாம் என அறிவிப்புப் பலகைகள் இருந்தும் இந்த நடைமுறை தொடர்வதாக அவர் கூறினார்.

பூண்டி அடிவாரத்தில் தமிழ்நாடு வனத்துறை கடுமையாக சோதனை செய்திருந்தால், 14–15 டன் பிளாஸ்டிக் மலைக்கு கொண்டு செல்லப்படுவது தவிர்க்கப்பட்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது. காலி பாட்டில் திருப்பி அளித்தால் ₹20 திருப்பி வழங்கும் திட்டமும் செயல்பட்டு வருகிறது.
தவிர, பூண்டியில் சேகரிக்கப்பட்ட மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக்கில் அலமாரி, மேசை, வெளிப்புற நாற்காலிகள் போன்ற பொருட்கள் தயாரிக்கப்பட்டுள்ளன; அவை விரைவில் வனத்துறைக்கு வழங்கப்படவுள்ளது.
இதுபோன்ற கழிவு சேகரிப்பு முயற்சி மருதமலை கோவில் பகுதிக்கும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தைப்பூச விழாவுக்குப் பின் சில தொண்டு நிறுவனங்கள் இங்கு தூய்மைப் பணியை மேற்கொண்டனர்.
[youtube-feed feed=1]