சென்னை: உள்துறை அமைச்சர் அமித்ஷா இரண்டு நாள் பயணமாக இன்று திருச்சி வருகிறார் . அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார்.
தமிழகம் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டமன்ற தேர்தல் இன்னும் இரண்டு மாதத்திற்குள் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் களம் பரபரப்பாக காணப்படுகிறது. தேர்தல் அதிகாரிகளும், தேர்தல் நடத்துவதற்கான பணிகளை முடுக்கி விட்டுள்ளனர். இந்த மாத இறுதியில் தேர்தல் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் பாஜக அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற பல்வேறு வியூகங்களை பாஜக வகுத்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக பிரதமர் மோடி கடந்த மாதம் இறுதியில் தமிழ்நாடு வருகை தந்து, பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டார். இதையடுத்து, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தமிழகம் மற்றும் காரைக்காலில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இரண்டு நாள் சுற்றுப்பயணமாக இன்று திருச்சி வருகை தர உள்ளார்.
டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் இன்று மாலை திருச்சிக்கு வருகை தரும் அமித்ஷா இன்று இரவு திருச்சியில் உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் ஓய்வெடுக்கிறார். நாளை (பிப்ரவரி 14-ம் தேதி) திருச்சி விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் காரைக்கால் புறப்பட்டுச் செல்கிறார். காரைக்கால் வரிச்சிகுடி அரசு பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேடில் தரையிறங்குகிறார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் புறப்பட்டு காரைக்கால் நகராட்சி திடல் சென்றடைகிறார். அங்கு ஏற்பாடு செய்துள்ள பா.ஜ.க. பொதுக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகிறார்.
பொதுக்கூட்டம் முடிந்தபின் மீண்டும் ஹெலிகாப்டர் மூலம் திருச்சி விமான நிலையம் வரும் அவர், விமானத்தில் சேலம் புறப்பட்டு செல்கிறார். அங்கு நடைபெறும் பா.ஜ.க. மத்தியக்குழு கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகிறார்.
அமித்ஷா வருகையையொட்டி மத்திய மந்திரிகள் பியூஸ் கோயல் எல்.முருகன், தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் திருச்சியில் முகாமிட்டுள்ளனர்.
[youtube-feed feed=1]