சென்னை: 36 நாட்களாகக் காத்திருக்கிறோம், தோழமையை மதித்து பொறுமை காக்கிறோம் இதுவரை கூட்டணி குறித்து திமுக தலைமை எத்தவொரு பதிலும் தெரிவிக்காமல் உள்ளது என காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாக்கூர் விமர்சனம் செய்துள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர், திமுக தலைமையிலான கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்துப் பேச்சுவார்த்தை நடத்த காங்கிரஸ் தரப்பில் டிசம்பர் 3-ஆம் தேதியே ஐவர் குழு அமைக்கப்பட்டுவிட்டது. ஆனால், இதுவரை திமுகவில் இருந்து எந்தவொரு பதிலும் இல்லை. இருப்பினும், கடந்த 36 நாட்களாக திமுகவின் அழைப்பிற்காகக் காத்திருக்கிறோம் என்றார்.
மேலும், கூட்டணியில் தோழமையை மதித்து பொறுமை காப்பதாகவும், காங்கிரஸ் கட்சிக்கு உரிய அங்கீகாரமும் மரியாதையும் அளிக்கப்பட வேண்டும் என்பதே தொண்டர்களின் விருப்பம் என்றவர், காங்கிரஸ் கட்சியை அவமானப் படுத்தினால் ஏற்க முடியாது, தன்மானம் முக்கியம் என்றவர், மேலிடம் எடுக்கும் முடிவுகளுக்குக் கட்டுப்பட்டு நடக்கத் தயாராக இருப்பதாகவும் கூறினார்.
நாடாளுமன்ற விவகாரம் குறித்த கேள்விக்கு பதில் கூறியவர், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள், குறிப்பாக ராகுல் காந்தி பேசுவதற்கு மத்திய அரசு தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருவதாக குற்றம் சாட்டியவர், ஜனநாயக முறையில் கேள்வி கேட்கும் உரிமையை மறுப்பதாகக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டதால், தானும் மதுரை எம்.பி. சு. வெங்கடேசனும் உள்ளிட்ட 8 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டதை அவர் சுட்டிக்காட்டினார்.
இந்தியா அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் குறித்து கூறியவர், இந்திய விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அடகு வைத்துவிட்டு, அமெரிக்கப் பொருட்களை இந்தியாவில் சந்தைப்படுத்த பிரதமர் மோடி வழிவகை செய்வதாகச் சாடினார்.
தற்போது அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள . ‘எப்ஸ்டீன்’ விவகாரம் தொடர்பான கேள்விக்கு, இந்த விவகாரத்தில் அனில் அம்பானி மற்றும் மத்திய அரசுக்குத் தொடர்பு இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், உண்மைகள் வெளிவந்துவிடுமோ என்ற அச்சத்திலேயே பிரதமர் நாடாளுமன்றத்திற்கு வரத் தயங்குகிறார் என விமர்சித்தார்.
டிஎன்பிஎஸ்சி தேர்வு திடீர் ரத்து தொடர்பான கேள்விக்கு , அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகள் திடீரென ரத்து செய்யப்படுவது கண்டிக்கத்தக்கது என்றார். தொடர்ந்து பேசியவர், மற்ற மாநிலங்களுக்கு முன்னுரிமை அளிக்கும் மத்திய அரசு, தமிழகத்தையும் குறிப்பாக மதுரையையும் வஞ்சிப்பதாகக் குற்றம் சாட்டினார்.
மெட்ரோ ரயில் உள்ளிட்ட திட்டங்களை முடிப்பதற்கான காலக்கெடுவை மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
[youtube-feed feed=1]