சென்னை: தி.மு.க மற்றும் தி.மு.க அறக்கட்டளையின் வருமான வரி கோப்புகளை மாற்றக் கோரிய வருமான வரித்துறையின் மேல்முறையீட்டு மனுக்கள் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகின்றன.
தி.மு.க மற்றும் தி.மு.க அறக்கட்டளையின் வருமான வரி கோப்புகளை (Files), அமைச்சர் துரைமுருகன் தொடர்புடைய இடங்களில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.11.48 கோடி விவகாரத்தை விசாரிக்கும் அதிகாரிக்கு மாற்றக் கோரிய வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் இன்று (பிப்.9, 2026) விசாரிக்கிறது.

கடந்த 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது, தி.மு.க பொதுச்செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன் மற்றும் அவரது மகன் கதிர் ஆனந்த் எம்.பி ஆகியோருக்குத் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. அப்போது, சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் வார்டுகளின் பெயர்கள் அச்சிடப்பட்ட கவர்களில் அடைக்கப்பட்டிருந்த ரூ.11.48 கோடி ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில் விசாரணை நடத்த ஏதுவாக, தி.மு.க மற்றும் தி.மு.க அறக்கட்டளையின் வரி தொடர்பான கோப்புகளை மத்திய சரகம்-1(3) உதவி ஆணையருக்கு மாற்ற வருமான வரித்துறை 2021-ல் உத்தரவிட்டது.
வருமான வரித்துறையின் இந்த கோப்பு மாற்ற உத்தரவை எதிர்த்து தி.மு.க தரப்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதனை விசாரித்த தனி நீதிபதி சி.சரவணன், கடந்த 2025 மே மாதம் வருமான வரித்துறையின் உத்தரவை ரத்து செய்து, சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு வாய்ப்பளித்து மீண்டும் புதிய உத்தரவை பிறப்பிக்குமாறு அறிவுறுத்தினார்.
இந்த தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து, வருமான வரித்துறை தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த மேல்முறையீட்டு மனுக்கள் தலைமை நீதிபதி மணீந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள் முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வருகின்றன.
மத்தியில் ஆளும் கட்சியின் அரசியல் நோக்கத்திற்காகவே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2019-ல் பறிமுதல் செய்யப்பட்ட பணத்திற்காக 2021 தேர்தலுக்கு முன்பாக கோப்புகளை மாற்றினர். அதேபோல இப்போதும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக இந்த வழக்கு தீவிரப்படுத்தப்படுகிறது என மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் வாதிட்டார். மேலும், அதிகாரியின் மீது தனிப்பட்ட உள்நோக்கம் இருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
கோப்புகளை ஒரு அதிகாரியிடமிருந்து மற்றொரு அதிகாரிக்கு மாற்றுவது என்பது நிர்வாக ரீதியான நடவடிக்கை மட்டுமே. இது சென்னையில் உள்ள அதிகாரிகளுக்கு இடையிலேயே மாற்றப்படுவதால் வரி செலுத்துபவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. இதில் தனிப்பட்ட உள்நோக்கம் கற்பிப்பது தவறு. அதிகாரிகள் தங்கள் கடமையைத்தான் செய்கிறார்கள்” என வருமான வரித்துறை வாதிட்டுள்ளது. நாளை நடைபெறவுள்ள இந்த விசாரணையின் முடிவு, தமிழக அரசியல் களத்திலும் வருமான வரி விசாரணை போக்கிலும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
[youtube-feed feed=1]