சென்னை: தமிழ்நாடு வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக, தேர்வு ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப் பட்டதைத் தொடர்ந்து,  டிஎன்பிஎஸ்சி தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது.

குரூப் 2  தேர்வு தமிழ்நாடு முழுவதும் நேற்று (பிப்ரவரி 8ந்தேதி) நடைபெறுவதாக இருந்தது. இதனால், தேர்வர்கள் தேர்வு மையத்தில் திரண்டனர். இந்த நிலையில், தேர்வு மையம் உள்பட பல்வேறு குளறுபடிகள் காரணமாக தேர்வுகள் கடுமையான மனஉளைச்சலுக்கு ஆளானதுடன், தமிழ்நாடு அரசுக்குஎதிராக போராட்டத்தில் குதித்தனர். இதையடுத்து தேர்வு ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

தமிழ்நாடு வரலாற்றில், இதுபோன்ற அதிமுக்கியத்துவம் வாய்ந்த ஒரு தேர்வு, தேர்வு நாளன்று ஒத்திவைக்கப்படுவது இதுவே முதல் முறை என கூறப்படுகிறது. இது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியது. அனைத்து கட்சிகளைச் சேர்ந்த  அரசியல் தலைவர்கள் தங்களது  கண்டனத்தை பதிவு செய்துள்ளனர்.

இதையடுத்து, TNPSC தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி சண்முக சுந்தரம் பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. . அவருக்கு பதிலாக வெங்கடப்பிரியா ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

முன்னதாக,  தமிழ்நாடு முழுவதும் 9 ஆயிரத்துக்கும் அதிகமானோர் எழுதும் குரூப் 2 முதன்மை தேர்வுகள் இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக விண்ணப்பித்த தேர்வர்கள் காலையில் தேர்வு மையம் வந்தனர். அப்போது சென்னை டிஜி வைஷ்ணவா கல்லூரியில் அறிவிக்கப்பட்ட தேர்வு மையம் கடைசி நேரத்தில் மாற்றப்பட்டு அங்கு தேர்வு எழுத வந்தவர்கள் நந்தனம் அரசு கலைக்கல்லூரிக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டனர். ஆனால் கடைசி நேரத்தில் மாற்றம் சொல்லப்பட்டதால் கடும் அதிருப்தியடைந்த தேர்வர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேசமயம் 9 மணிக்கு பல மையங்களில் திட்டமிட்டபடி தேர்வு தொடங்கியது. இந்த நிலையில் தொடர் போராட்டத்தில் தேர்வர்கள் ஈடுபட்டதால் தமிழ்நாடு முழுவதும் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்தது. இதனால் இந்த தேர்வை எழுத வந்த பலரும் கடும் அவதியடைந்தனர்.

இந்த நிலையில் குரூப் 2 முதன்மை தேர்வு ஒத்திவைக்கப்பட்டதற்கு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட எக்ஸ் பதிவில், “தமிழ்நாடு முழுவதும் இன்று நடைபெறவிருந்த குரூப் 2, 2A முதன்மைத் தேர்வானது, ஹால் டிக்கெட் மற்றும் தேர்வு மைய குளறுபடிகளால் ஒத்திவைக்கப்படுவதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக்கியத்துவம் வாய்ந்த ஒரு தேர்வு, தேர்வு நாளன்று ஒத்திவைக்கப்படுவது தமிழ்நாட்டின் வரலாற்றிலேயே இதுவே முதல் முறை. அதுவும், பல இடங்களில் தேர்வர்கள் தேர்வு ஒத்திவைக்கப்பட்டதே தெரியாமல் தேர்வு எழுதியுள்ளனர். “Technical Fault” என ஒற்றை வரியில் தப்பிக்க முயலும் நிலையில் அதற்கு பின்னால் தேர்வெழுதிய இளைஞர்களின் பல ஆண்டுகால உழைப்பும் நம்பிக்கையும் சிதைந்துள்ளது” என தெரிவித்துள்ளார்.

அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள கண்டன பதிவில்,”தமிழ்நாடு முழுவதும் இன்று காலையும், மாலையும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படவிருந்த முதன்மைத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்தத் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதற்கான டி.என்.பி.எஸ்.சி நிர்வாகத்தில் அலட்சிய செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை.மிகச்சாதாரணமான ஒரு போட்டித் தேர்வைக் கூட குளறுபடிகள் இல்லாமல் நடத்துவதற்கு முடியாத நிலையில் தான் திமுக அரசு செயல்பட்டு வருகிறது” என கூறியுள்ளார்.

பாஜக மாநிலத்தலைவர்  நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தேர்வு மையங்கள் ஒதுக்குவதில் அரசு செய்த குளறுபடிகளின் காரணமாக  தமிழ்நாடு முழுவதும் நடைபெறவிருந்த TNPSC குரூப் 2 மற்றும் 2A தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் நம்மை கொதிப்படையச் செய்கின்றன. ஆளும் அரசின் நிர்வாகத் தோல்விக்கு நமது இளைஞர்களின் பலமாத உழைப்பு வீணாவதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது.

அரியணை ஏறியதும் 5 லட்சம் இளைஞர்களுக்கு அரசுப் பணிகளை வழங்குவோம் எனப் போலி வாக்குறுதி அளித்த திமுகவின் ஆட்சியில் அரசுப் பணியாளர்களுக்கான தேர்வுகள் முறையாக நடத்தப்படுவதில்லை என்பதையும், கமிஷன் அடிப்படையில் தான் அரசுப் பதவிகள் வழங்கப்படுகின்றன என்பதையும் நாம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

இந்த நிலையில் வெறும் 9 ஆயிரம் தேர்வாளர்கள் பங்குபெறும் குரூப் 2 மற்றும் 2A தேர்வுகளில் இத்தனை குளறுபடிகள் நடப்பது பலவித சந்தேகங்களை எழுப்புகிறது. உண்மையிலேயே அரசுத் தேர்வுகளில் இம்மாதிரியான குழப்பங்கள் எதேச்சையாக நடைபெற்றனவா? அல்லது தேர்வை ரத்து செய்ய வேண்டுமென்ற அரசின் திட்டமிட்ட சதியா? என்பதை ஆதாரங்களுடன் பொதுமக்களிடம் விளக்க வேண்டியது முதல்வர் மு.க.ஸ்டாலினின் தார்மீகப் பொறுப்பு.’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழிசை சௌந்தரராஜன் வெளியிட்டுள்ள பதிவில், 9000 டிஎன்பிஎஸ்சி தேர்வர்களின் கனவு இங்கே நசுக்கப்பட்டு கொண்டிருக்கிறது. பல இடங்களில் சென்டர் ஒதுக்கப்படாமல் போராடிக் கொண்டிருக்கின்ற நேரத்தில் சில இடங்களில் தேர்வு எழுத ஆரம்பித்து விட்டார்கள். இந்த குளறுபடி இந்த ஆட்சியின் குழப்பத்தின் உச்சக்கட்டம். தேர்வு எழுதுவதே போராட்டமாக போராட்டமாக வெடித்திருப்பது வேதனையிலும் வேதனை அரசு உடனே இதற்கு நடவடிக்கை தேவை என  கூறியுள்ளார்.

தவெக தலைவர்  தலைவர் விஜய் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில்,  “அரசுப் பணி என்கிற கனவோடு TNPSC Group 2, 2A முதன்மைத் தேர்வை எழுதவிருந்த பல்லாயிரக்கணக்கான இளைஞர்களின் நம்பிக்கையைச் சிதைத்த வெற்று விளம்பர மாடல் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனங்கள். அரசுப் பணி என்பது, இளைஞர்கள் ஒவ்வொருவரின் உயரிய கனவும் லட்சியமும் ஆகும். அதை அடைய அவர்கள் பல ஆண்டுகளாக இரவு பகலாகக் கண்விழித்துப் படித்து, போட்டித் தேர்வுகளுக்குத் தயாராவார்கள்.

அப்படிப்பட்ட ஈடு இணையற்ற உழைப்புடன் தயாராகி, முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்று, தமது எதிர்கால வாழ்வு குறித்த மிகப் பெரிய கனவுகளோடு முதன்மைத் தேர்வை எழுத வருவார்கள். அந்த நேரத்தில் தேர்வு ரத்து செய்யப்பட்டால், இவ்வளவு காலம் உழைத்த உழைப்பு வீணாகி விடுமோ என்ற அச்சம் அவர்களின் மனத்தில் ஆழப் பதிந்துவிடும். ரத்து செய்யப்பட்ட தேர்வு மீண்டும் நடத்தப்பட்டாலும் அதற்காக மீண்டும் மீண்டும் தங்களது கடின உழைப்பை முதலீடாக்கும் சூழல் உருவாகும். இதனால் இளைஞர்களின் பெறற்கரிய காலம் வீணாவதுடன் மனத்தளவில் அவர்கள் பெரும் பாதிப்பைச் சந்திக்க நேரிடும்.

எதிர்காலம் குறித்துக் கனவுகளோடு இருந்த இளைஞர்களுக்கு இப்படிப்பட்ட பாதிப்பை உருவாக்கிய இந்த வெற்று விளம்பர மாடல் திமுக அரசு யாருக்காக இயங்குகிறது? இளைஞர்களுக்கு நல்லதொரு நம்பிக்கையான எதிர்காலத்தை உருவாக்கிக் கொடுக்காத இந்த அரசு, இருந்து என்ன பயன்? இன்று TNPSC Group 2, 2A தேர்வு திடீரென ரத்து செய்யப்பட்டது, இந்தக் கபட நாடகத் திமுக அரசின் நிர்வாகத் திறமையின்மையையே வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

ஏற்கெனவே நகராட்சித் துறையில் வேலைக்கான தேர்வில் நடந்த முறைகேடுகள் வெளிவந்துள்ளன. இந்நிலையில், TNPSC நடத்தும் இந்தத் தேர்வு ரத்து செய்யப்பட்டதன் பின்னணியில் என்ன நடந்திருக்குமோ என்ற ஐயம் எழுவது இயல்பே. இன்னும் எந்த மிகப் பெரிய முறைகேட்டை மறைக்க இது நடந்துள்ளதோ என்ற சந்தேகம் எழாமல் எப்படி இருக்கும்? இதற்கு உரியவர்கள், உண்மையை நேர்மையாகச் சொல்ல வேண்டியது அவர்கள் கடமை என்பதை மறந்துவிடக் கூடாது.

எனவே, வரும் காலங்களில் இது போன்ற தவறுகள் நிகழாவண்ணம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். வெற்று விளம்பரத்தினால் மட்டுமே இயங்கிக்கொண்டிருக்கும் இந்த அரசுக்கு, வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டு இளைஞர் பட்டாளம் வெகுண்டெழுந்து, ஜனநாயக முறைப்படி தக்க பாடம் புகட்டுவது உறுதி.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

[youtube-feed feed=1]