சென்னை: குடிநீர் பாட்டில்களில் மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் கிடப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டு உள்ளது.

குடிநீர் பாட்டில்களில் மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் கண்டறியப்பட்டுள்ளதை மத்திய அரசின் அறிக்கை உறுதி செய்த நிலையில், இது தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், குடிநீர் பாட்டில்களில் உள்ள மைக்ரோ பிளாஸ்டிக்கால் மனிதர்களுக்கு மட்டுமல்லாமல், விலங்குகளுக்கும் தீங்கை ஏற்படுத்தக்கூடியது என நீதிபதிகள் வேதனை தெரிவித்ததுடன், குடிநீர் பாட்டில்களில் மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் இடம்பெற்றுள்ளது குறித்து எச்சரிக்கை வாசகங்களை பாட்டில்களில் இடம்பெறச் செய்ய வேண்டும் என அதிரடியாக உத்தரவிட்டு உள்ளது.
நஞ்சுக்கொடியில் மைக்ரோ பிளாஸ்டிக் எனும் பிளாஸ்டிக் நுண்துகள்கள் கண்டறியப்பட்டதாக வெளியான செய்தியின் அடிப்படையில் சென்னை உயர் நீதிமன்ற சிறப்பு அமர்வு தாமாக முன்வந்து வழக்கை எடுத்துக்கொண்டது. இந்த வழக்கு நீதிபதிகள் என். சதீஷ்குமார், டி. பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மத்திய சுகாதாரதுறை சார்பில் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் அறிக்கை தாக்கல் செய்தத. அந்த அறிக்கையில், உணவுப் பொருட்களை பிளாஸ்டிக் பைகளில் பொதிந்து விற்பனை செய்வது தொடர்பாக ஏற்கனவே வழிகாட்டு விதிகள் வகுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் பிளாஸ்டிக் நுண்துகள்களால் ஏற்படும் பாதிப்பு குறித்து லக்னோ, கொச்சி, பிலானி ஆகிய மூன்று இடங்களில் உள்ள ஆராய்ச்சி நிறுவனங்கள் மூலமாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இமாச்சல பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட ஆறு மாநிலங்களில் குடிநீர் பாட்டில்களின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, ஆய்வு செய்தபோது, அவற்றில் மைக்ரோ பிளாஸ்டிக் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும், அதேபோல பிளாஸ்டிக் பாக்கெட்களில் அடைத்து விற்கப்படும் உப்பு, சர்க்கரையிலும் மைக்ரோ பிளாஸ்டிக் இருப்பதாக தெரியவந்துள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்த அறிக்கையை ஆய்வு செய்த நீதிபதிகள், மைக்ரோ பிளாஸ்டிக்கால் மனிதர்களுக்கு மட்டுமல்லாமல், விலங்குகளுக்கும் தீங்கை ஏற்படுத்தக்கூடியது; அன்றாடம் பயன்படுத்தும் குடிநீர் பாட்டில்களில் மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் கண்டறியப்பட்டுள்ளதால், அவற்றில் எச்சரிக்கை வாசகங்கள் இடம்பெறச் செய்ய வேண்டுமென குடிநீர் பாட்டில் உற்பத்தி நிறுவனங்களுக்கு அறிவுறுத்த மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர்.
ஆய்வுகள் ஆரம்ப நிலையில் இருப்பதால், எச்சரிக்கை வாசகங்களை இடம்பெறச் செய்தால் மக்களிடையே குழப்பம் ஏற்படும் என இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, ஆய்வுகளை விரைந்து முடிக்க அறிவுறுத்திய நீதிபதிகள், அதுவரை எச்சரிக்கை வாசகங்களை ஒட்ட வேண்டுமென குடிநீர் பாட்டில் நிறுவனங்களுக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்தனர்.
[youtube-feed feed=1]