சென்னை: தேமுதிக, த.வெ.க கட்சிகள் சார்பில் இன்று முதல் விருப்ப மனு விநியோகம்  நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதையொட்டி, அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு என பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன. இதன் தொடர்ச்சியாக  சட்டமன்ற தேர்தலில்  போட்டியிட விரும்புவோருக்கான விருப்பமனு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், தவெக, தேமுதிக தரப்பில், விருப்பமனு விநியோகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக  தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் உள்ள 30 சட்டப்பேரவை தொகுதிகளிலும் தேமுதிக சார்பில் போட்டியிட ஆர்வம் உள்ளவர்கள் பிப். 6-ம் தேதி (இன்று) முதல் விருப்ப மனுக்களை பெற்றுக் கொள்ளலாம். சென்னை கோயம்பேட்டில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விருப்ப மனுக்கள் விநியோகம் செய்யப்படும்.

இதில் பொது தொகுதிக்கு ரூ.15 ஆயிரமும், தனித் தொகுதிக்கு ரூ.10 ஆயிரமும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி சட்டப்பேரவை பொதுத் தொகுதிக்கு ரூ.10 ஆயிரமும், தனித் தொகுதிக்கு ரூ.5 ஆயிரமும் கட்டணமாக செலுத்தி விருப்ப மனுக்களைப் பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கையாகத் திகழும் தவெக நல்லாட்சியை வழங்கும் நோக்கில் விஜய் தலைமையில் தீவிரமாகக் களமாடி வருகிறது. இந்தக் களத்தில் தேர்தல் அரசியல் என்பது, மிகவும் அத்தியாவசியமான ஒன்று. ஆட்சி அதிகாரம் நம் கையில் இருந்தால் மட்டுமே தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளை முழுவதுமாக நிறைவேற்ற முடியும். தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல முடியும். அந்த வகையில், வருகின்ற சட்டசபைத் தேர்தலை நாம் எழுச்சியுடன் சந்திக்கின்றோம்.

தமிழகத்தின் 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிட விரும்பும் கழகத் தோழர்கள் தங்களின் விருப்ப மனுக்களை அளிக்கலாம். இதற்கான விருப்ப மனுக்கள், வரும் 06.02.2026 வெள்ளிக்கிழமை முதல் 14.02.2026 சனிக்கிழமை வரை கழகத் தலைமை நிலையச் செயலகத்தில் வழங்கப்படுகின்றன.

பிப்ரவரி 6ஆம் தேதி அன்று நண்பகல் 12 மணி முதல், விருப்ப மனுக்களைப் பெறலாம். இதர நாள்களில் காலை 10.00 மணி முதல், மாலை 06.00 மணி வரை விருப்ப மனுக்களைப் பெறலாம். விருப்பம் உள்ளவர்கள் அவற்றைப் பெற்று, அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் முழுமையாகப் பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களுடன் ஒப்படைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் விருப்ப மனுக்களுக்கான கட்டணம் குறித்த விவரங்கள் வெளியிடப் படவில்லை.

அண்மையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் விருப்ப மனு ரூ.50 ஆயிரம் என்று தெரிவிக்கப்பட்டது. இதனால் நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் விருப்ப மனு கட்டணம் குறித்த தகவல் இடம்பெறாததால், அக்கட்சியினர் இடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது.

[youtube-feed feed=1]