சென்னை: தமிழகத்தில் திமுக அரசின் கொடுங்கோல் ஆட்சிக்கு மடப்புரம் அஜித் குமார் மரணமே சான்று தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டி உள்ளார்.
கடந்த ஐந்து ஆண்டுகளாகத் தமிழகத்தில் நடப்பது மனிதநேயமற்ற கொடுங்கோல் ஆட்சி என்பதற்கு மடப்புரம் அஜித் குமார் மரணத்தைவிட வேறு என்ன சான்று வேண்டும் என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மடப்புரம் அஜித் குமார் காவல் நிலைய மரண வழக்கில் நகை திருட்டு என நிகிதா அளித்தது பொய் புகார் என மதுரை உயர்நீதிமன்ற கிளையின் சிபிஐ அளித்துள்ள தகவல் மூலம் பரபரப்பு திருப்பம் ஏற்பட்டுள்ளது. அஜித் குமார் மரணம் தொடர்பாக சிபிஐ நடத்திய விசாரணையில் மானாமதுரையில் டிஎஸ்பியாக பணியாற்றிய சண்முகசுந்தரம், திருப்புவனம் காவல் ஆய்வாளர் ரமேஷ் உள்ளிட்ட 4 அதிகாரிகள் என மொத்தம் 10 பேர் மீது மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
தனிப்படை போலீஸ்காரர்களான கண்ணன், ராஜா, ஆனந்த், பிரபு, சங்கர மணிகண்டன் ஆகிய 5 பேரும் ஜாமீன் கோரி மதுரை உயர் நீதிமன்ற கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு நீதிபதி ஸ்ரீமதி அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.. அப்போது சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் போலீசார் தாக்கியதால் தான் அஜித்குமார் உயிரிழந்து இருக்கிறார். இதில் குற்றம் சாட்டப்பட்ட 10 பேருக்கும் தொடர்பு உள்ளது எனவே மனுதாரர்களுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என கடும் ஆட்சேபம் தெரிவித்தார். இதை நீதிபதி பதிவு செய்து கொண்டார்.
பின்னர் அஜித்குமார் மீதான நகை திருட்டு புகார் உண்மைதானா? என நீதிபதி கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த சிபிஐ வழக்கறிஞர், ‘நகை திருட்டு புகாருக்கு முகாந்திரம் இல்லை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது, எனவே அந்த புகார் தொடர்பான வழக்கு முடித்து வைக்கப்பட்டுவிட்டது என தெரிவித்தார். இதைக் கேட்ட நீதிபதி ஒன்றுமே இல்லாத விஷயத்தில் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்? இதற்கு காரணமான புகார் தரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? என கேள்வி எழுப்பினார். இந்த வழக்கு முடியும் வரை யாராக இருந்தாலும் சிறையிலேயே இருக்கட்டும். காவல்துறையினருக்கு பாடம் புகட்ட வேண்டும் எனக் கூறி இந்த வழக்கின் விசாரணை வருகிற பிப்ரவரி 16ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
இதுதொடர்பாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளப்பதிவில், “கடந்த ஆண்டு ஜூன் மாதம் தமிழகத்தையே உலுக்கிய சிவகங்கை மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமாரின் மரணம், காவல் மரணம் எனவும், அஜித்குமார் மீது நிகிதா அளித்த புகாரில் உண்மையில்லை எனவும் சென்னை உயர்நீதிமன்ற அமர்வில் சிபிஐ இன்று அறிக்கை தாக்கல் செய்துள்ளது. ஒன்றுமே இல்லாத வழக்கில் அப்பாவி ஒருவரைக் காவலர்கள் அநியாயமாக அடித்துக் கொலை செய்துவிட்டனர் என நீதிபதிகள் காட்டம் தெரிவித்துள்ளனர்.கடந்த ஐந்து ஆண்டுகளாகத் தமிழகத்தில் நடப்பது மனிதநேயமற்ற கொடுங்கோல் ஆட்சி என்பதற்கு இதைவிட வேறு என்ன சான்று வேண்டும்?
பாலியல் வன்கொடுமை குறித்து புகாரளிக்க வரும் பெண்களிடம் தனிப்பட்ட முறையில் துருவித் துருவி விசாரித்து அவர்களை தர்மசங்கடத்திற்கு ஆளாக்கும் திமுகவின் ஏவல்துறை, அஜித்குமார் மீதான புகாருக்கு மட்டும் அதிரடி காட்டியதன் காரணம் என்ன? புகாரின் பின்னணியையும் உண்மைத் தன்மையையும் முழுதாக ஆராயாமல் கையில் கிடைத்த அப்பாவியைக் கம்பால் அடித்தே கொலை செய்யுமளவிற்குக் காவலர்களின் இதயம் மரத்துப் போய்விட்டதா? மூளை மழுங்கிவிட்டதா? அல்லது மேலிடத்திலிருந்து அத்தனை அழுத்தம் கொடுக்கப்பட்டதா?
சிவகங்கை வரை சென்ற முதல்வர் ஸ்டாலின் தமது ஏவல்துறையின் மூர்க்கத்தனத்தால் அடித்துக் கொல்லப்பட்ட அஜித்குமாரின் இல்லத்திற்குச் சென்று ஆறுதல் சொல்லாதது ஏன்? – உள்ளிட்ட பல கேள்விகள் மக்கள் மனதை அரித்துக் கொண்டிருக்கின்றன.இவை அனைத்திற்குமான விடைகள் வரும் சட்டமன்றத் தேர்தலின் முடிவுகளில் கிடைக்கும்! ஏழை எளிய மக்களை பலிகொடுக்கும் திமுகவின் காட்டாட்சி விரட்டியடிக்கப்படும்”
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
[youtube-feed feed=1]