சென்னை: பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்களை நியமிக்க விதிக்கப்பட்ட தடை ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், முதலமைச்சருடன் ஆலோசனை நடத்தி தமிழ்நாட்டில் காலியாக உள்ள பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்களை விரைவில் நியமிப்போம் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார்.

துணைவேந்தர்களை தமிழ்நாடு அரசு நியமிப்பது தொடர்பான வழக்கை 6 வாரங்களில் விசாரித்து உத்தரவிட சென்னை உயர்நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், அமைச்சர் கோவி செழியன், துணைவேந்தர்களை மாநில அரசுகளே நியமிக்கலாம் என்ற உத்தரவை உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பெற்றது மிகப்பெரிய பெருமை என்றும் கூறினார்.
முன்னதாக, துணை வேந்தர்கள் நியமனம் செய்வது தொடர்பான தமிழ்நாடு அரசின் உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்‘றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கான துணைவேந்தர்களை ஆளுநருக்குப் பதில், முதலமைச்சரே நியமிக்க வகைசெய்யும் சட்டத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்திருந்தது.
இதனை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அதேபோல், சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை உச்சநீதி மன்றத்திற்கு மாற்றக்கோரியும் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்குகள் இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூரியகாந்த் அமர்வில் விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையில் தமிழ்நாடு அரசு, அவசர அவசரமாக உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. குறிப்பாக விடுமுறைகால அமர்வில் வழக்கு தொடுக்கப்பட்டு உத்தரவு பெறப்பட்டது.
மனுதாரர் நெல்லை மாவட்டத்தில் இருந்து நேரடியாக சென்னை உயர்நீதிமன்ற பிரதான அமர்வில் தாக்கல் செய்து, மாநில அரசு பதிலளிக்க கால அவகாசம் கொடுக்கவில்லை.
மேலும் இந்த வழக்கை உச்சநீதிமன்றத்துக்கு மாற்ற மனு தாக்கல் செய்ய உள்ளதாக தெரிவித்த போதும் அதனை நீதிபதி கருத்தில் கொள்ளவில்லை.
குறிப்பாக விடுமுறைகால அமர்வில் இந்த வழக்கை விசாரிக்க முடியாது ஏனெனில் இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இது தொடர்பாக நீதிமன்ற நடைமுறை உள்ளது. ஆனால், அது மீறப்பட்டுள்ளது என வாதம் வைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இந்த விவகாரத்தில் உத்தரவு பிறப்பித்த உச்சநீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால உத்தரவு பிறப்பித்தும், சென்னை உயர்நீதிமன்றம் வழக்கை விசாரணையை ஆறு வாரங்களில் முடிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
[youtube-feed feed=1]