தமிழ்நாட்டில் முதல் முறையாக, ஒரே ஆண்டில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான புதிய புற்றுநோய் நோயாளிகள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
2025-ம் ஆண்டுக்கான இந்த தகவலை, மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
இந்த ஆண்டில் மட்டும் 1,00,097 பேர் புதிதாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், பொதுச் சுகாதார நிபுணர்கள் கவலையடைந்துள்ளனர்.

கடந்த ஐந்து ஆண்டுகளாக புற்றுநோய் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
2020-ல் 68,750 பேர் இருந்த எண்ணிக்கை, 2021-ல் 76,968 ஆகவும், 2022-ல் 89,265 ஆகவும், 2023-ல் 92,816 ஆகவும், 2024-ல் 96,486 ஆகவும் உயர்ந்து, 2025-ல் ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது.
இந்த ஆண்டில் பதிவான நோயாளிகளில், 53,542 பேர் பெண்கள், 46,555 பேர் ஆண்கள். தற்போது தமிழ்நாட்டில் 1,09,097 பேர் புற்றுநோயுடன் வாழ்ந்து வருகின்றனர்.
மாவட்டங்களிலேயே சென்னை மிக அதிக பாதிப்புடன் இருக்கிறது.
சென்னையில் மட்டும் 8,505 புதிய நோயாளிகள் பதிவாகியுள்ளனர்.
அதற்குப் பிறகு காஞ்சிபுரம் (7,295) மற்றும் வேலூர் (6,525) மாவட்டங்கள் உள்ளன.
நகர்ப்புறங்களில் புற்றுநோய் அதிகமாக இருப்பதற்கு, முறையற்ற உணவுப் பழக்கம், புகையிலை பயன்பாடு, மாசு, மன அழுத்தம், மற்றும் தாமதமான மருத்துவ பரிசோதனை ஆகியவையே காரணங்கள் என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
ஆண்களில், வாய் புற்றுநோய் அதிகமாக உள்ளது. இது பெரும்பாலும் புகையிலை பயன்பாட்டால் வருகிறது. அடுத்து குடல் மற்றும் வயிறு புற்றுநோய் வருகிறது.
பெண்களில், மார்பக புற்றுநோய் முதன்மையாக உள்ளது. கருப்பை வாய்ப் புற்றுநோய் மற்றும் கருப்பை புற்றுநோயும் கணிசமான அளவில் பதிவாகியுள்ளன.
மருத்துவர்கள் கூறுவதாவது, புற்றுநோய் நோயாளிகளில் பாதி பேர் கடைசி நிலையில்தான் கண்டுபிடிக்கப்படுகிறார்கள். இதனால் சிகிச்சை கடினமாகவும், செலவு அதிகமாகவும் ஆகிறது.
புற்றுநோயைத் தடுப்பதற்கு, உடற்பயிற்சி உடல் எடையை கட்டுப்பாட்டில் வைத்தல் புகையிலை, மதுபானம் தவிர்த்தல் அவ்வப்போது மருத்துவ பரிசோதனை மிக அவசியம் என அறிவுறுத்தப்படுகிறது.
உடலில் கட்டி, காரணமில்லா எடை குறைவு, நீண்ட நாட்களாக வலி, அல்லது அசாதாரண அறிகுறிகள் இருந்தால், உடனே மருத்துவரை அணுக வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.
மேலும், 2025-ம் ஆண்டில் மட்டும் மார்பக, கருப்பை வாய்ப் மற்றும் கருப்பை புற்றுநோய்களால் 10,821 பேர் உயிரிழந்துள்ளனர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
இந்த எண்ணிக்கைகள், புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு, முன்னெச்சரிக்கை பரிசோதனை மற்றும் ஆரம்ப நிலையிலேயே கண்டறிதல் அவசியம் என்பதற்கான எச்சரிக்கை மணி என சுகாதார நிபுணர்கள் கூறுகிறார்கள்.
[youtube-feed feed=1]