சென்னை:  சகோதரர் ராகுல் காந்தியின் கேள்விகளுக்கு பாஜக ஏன் அஞ்சுகிறது?  என தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார். மேலும், எட்டு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதை  கண்டித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில்  குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.  இந்த விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய எதிர்க்கட்சி தலைவர்  ராகுல் காந்தி பேசிய போது, சீனாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் மற்றும் முயற்சிகள் குறித்து பேசினார். அதுமட்டுமல்லாமல் ராகுல் காந்தியின் பேச்சிற்கான ஆதாரவ்மாக வெளியிடப்படாத  முன்னாள் ராணுவ தளபதி நரவானேவின் புத்தகத்தை மேற்கொள் காட்டினார்.

இதற்கு மத்திய அமைச்சர்களான அமித்ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர். இதன்பின் ராகுல் காந்தியை பேச விடாமல் தடுக்க பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் எம்பிக்கள் பல்வேறு கோஷங்களை எழுப்பினர். இதனால் அவை நடவடிக்கை முடங்கியது.

இதன் காரணமாகலோக்சபாவில் எதிர்க்கட்சிகள் சபாநாயகர் முன் பதாகைகளுடன் கோஷம் எழுப்பினர். தேசிய பாதுகாப்பு மற்றும் இந்தியா – அமெரிக்கா இடையிலான வர்த்தக மற்றும் வரி ஒப்பந்தம் குறித்து கேள்வி எழுப்பினர். அதுமட்டுமல்லாமல் பிரதமர் மோடி கையெழுத்திட்டுள்ள ஒப்பந்தம், அமெரிக்காவுக்கு சாதகமாக இருப்பதாகவும் விமர்சித்துள்ளனர். தொடர்ந்து காகிதங்களை கிழித்தெறிந்து கடும் அமளியில் எதிர்க்கட்சிகள் ஈடுபட்டனர். இதனால் தமிழக எம்பிக்களான சு.வெங்கடேசன், மாணிக்கம் தாகூர் உட்பட 8 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்த விவகாரம் நாடு முழுவதும் விவாதப் பொருளாக மாறி இருக்கிறது.

தேசிய பாதுகாப்பு மற்றும் இந்தியா – அமெரிக்கா ஒப்பந்தம் தொடர்பாக பலரும் கேள்வி எழுப்ப தொடங்கி இருக்கின்றனர்.

இந்த நிலையில், ராகுல்காந்திக்கு ஆதரவாக தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,

மதிப்பிற்குரிய எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் என் சகோதரர் திரு. ராகுல் காந்தி எழுப்பிய கேள்விகளுக்கு மத்திய பாஜக அரசு ஏன் அஞ்சுகிறது?

அரசாங்கம் அவையின் உறுப்பினர்களுக்குப் பதிலளிக்கத் தயாராக இருக்க வேண்டும், மேலும் தேசிய பாதுகாப்பு மற்றும் பொருளாதார நலன்கள் தொடர்பான விஷயங்களில் தெளிவுபடுத்த வேண்டும்.

எட்டு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளில் பேசுவதற்கான அவர்களின் ஜனநாயக உரிமை மீட்டெடுக்கப்படுவதற்காக, அந்த இடைநீக்கத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும் நான் கோருகிறேன்.

இவ்வாறு கூறி உள்ளார்.

[youtube-feed feed=1]