சென்னை:  ‘தி.மு.க ஆட்சியில் பள்ளி மாணவர்கள் பையில் கஞ்சா’  உள்ளது என  சென்னை பள்ளி சம்பவத்தை சுட்டிக்காட்டி எடப்பாடி பழனிச்சாமி  உள்பட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.

பள்ளி மாணவர்களிடையே புழங்கும் கஞ்சா, பட்டாக்கத்தி போன்ற செயல்களுக்காக  திமுக அரசு வெட்கித் தலைகுனிய வேண்டும் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறி உள்ளார்.

சென்னை எம்கேபி நகர் அரசுப் பள்ளியில் 11ம் வகுப்பு மாணவனிடம் ஆசிரியர்கள் சோதனை செய்யும் போது பேண்ட் பாக்கெட்டில் 5 கிராம் கஞ்சா போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்ட து. இது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் திமுக அரசையும், சென்னை காவல்துறை யையும் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது.

தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, போதை, கொலை, கொள்ளை போன்ற சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக பள்ளி மாணவர்கள் மட்டுமின்றி மாணவிகளிடையேயும் போதை பழக்கம் தலைவிரித்தாடுகிறது. இதை ஊர்ஜிதம் செய்யும் விதமாக,  சென்னை வியாசர்பாடி உள்ள எம்.கே.பி நகர் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்கள் கஞ்சா பயன்படுத்துவதாக வந்த புகாரையடுத்து ஆசிரியர்கள் மாணவர்களை சோதனை செய்தனர்.  அப்போது பதினோராம் வகுப்பு கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வரும் மாணவனை சோதனை செய்ததில், பேண்ட் பாக்கெட்டில் 5 கிராம் கஞ்சா பொட்டலம் மறைத்து வைத்தது தெரிய வந்தது.

இதனையடுத்து பள்ளி தலைமை ஆசிரியை ஹேமலதா, எம்.கே.பி நகர் காவல் நிலையத்திற்கு புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் மாணவனை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். மாணவனுக்கு ஏற்கனவே கஞ்சா பழக்கம் உள்ள நிலையில், அதை யாரிடம் வாங்கினார் என்பதை சொல்ல மறுத்ததுடன், அது பள்ளிக்கு வரும் போது சாலையில் கிடந்ததாக தெரிவித்துள்ளார். இது பல சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே பள்ளி மாணவர்களின் எதிர்காலத்தை சீரழிக்கும் கஞ்சா போன்ற போதை பொருட்கள் நடமாட்டம் பள்ளி மாணவர்களை குறி வைத்து விற்பனை செய்து வருவதும், மாணவர்கள் போதை பழக்கத்துக்கு அடிமையாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பள்ளி, கல்லூரி அருகே போதை பொருட்கள், கஞ்சா சாக்லெட் போன்றவை தங்கு தடையின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், பள்ளி மாணவன் பையில் கஞ்சா பொட்டலம் கைப்பற்றப்பட்ட  சம்பவத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ் கண்டனம், பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை உள்பட எதிர்க்கட்சி தலைவர்கள் கண்டனங்களை தெரிவித்துள்ளார்.

.இதுதொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தனது X பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,  சென்னை வியாசர்பாடியில் அரசுப்பள்ளியில் 11-ம் வகுப்பு பயிலும் மாணவனிடம் கஞ்சா போதைப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. ஒரு ஆட்சியாளராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ,Total Failure என்பதற்கு இந்த செய்தியே சாட்சி. அறிவுப்பூர்வமான கல்விக்கு வித்திட 11-ம் வகுப்பு பயிலும் அரசுப்பள்ளி மாணவர்கள் கையில் அ.இ.அ.தி.மு.க ஆட்சி லேப்டாப்பை கொண்டு சேர்த்தது. ஆனால், இன்றைய தி.முக. ஆட்சியிலோ, 11-ம் வகுப்பு மாணவனிடம் கஞ்சா போதைப்பொருள் தான் சென்றுள்ளது. இது எவ்வளவு பெரிய வெட்கக்கேடு?

ஆனால், இதையெல்லாம் பற்றி கிஞ்சற்றும் கவலைப் படாத ஒரு முதல்வர் நமக்கு வாய்த்திருப்பது ஆகப்பெரும் சாபக்கேடு. கஞ்சா, போதைப் பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்தாமல் வேடிக்கை பார்ப்பது மூலம், ஸ்டாலின் மாடல் தி.மு.க அரசு தமிழ்நாட்டின் எதிர்காலத்திற்கு மாபெரும் துரோகத்தை இழைத்துள்ளது. இளைஞர்களை, பள்ளி மாணவர்களை அடியோடு சீரழிக்கத் துணை போகும் இந்த விடியா தி.மு.க அரசுக்கு எனது கடும் கண்டனம்.

ஆட்சிக்கு வந்ததில் இருந்து ஆண்டுதோறும் நான் தொடர்ச்சியாக சுட்டிக் காட்டி வந்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காதது மாதிரி, வழக்கம் போல “ஓ” போடுவதோடு நிறுத்தாமல், பள்ளி மாணவன் கையில் போதைப்பொருள் வந்தது எப்படி என தீர விசாரித்து, போதைப் பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த, ஆட்சி மீதம் இருக்கின்ற 2 மாதங்களிலாவது ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ”சென்னை வியாசர்பாடியில் இயங்கி வரும் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் பள்ளிக்கு கஞ்சா எடுத்துச் சென்ற சம்பவம் இந்த போதை மாடல் அரசின் அவல ஆட்சிக்கான உதாரணம். பள்ளி மாணவர்கள் கைகளில் கஞ்சாவும், பைகளில் பட்டாக் கத்தியும் புழங்கும் நிலையில், “கல்வியில் சிறந்த தமிழ்நாடு” என்று விளம்பர விழா எடுக்க திமுக அரசு வெட்கித் தலைகுனிய வேண்டும்.

“அப்பா” என்ற அடைமொழிக்கு ஆசைப்படும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள், தனது கண்முன்னே பள்ளிக் குழந்தைகள் இப்படி போதையில் மூழ்கித் தடம் புரள்வதைக் கண்டும் காணாமல் கடந்து போவது அலட்சியத்தின் உச்சம்.

“அரசுப்பள்ளி எனது கோட்டை” என்று முழங்கிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள், அரசுப்பள்ளிகளில் இத்தனை அக்கிரமங்கள் நடக்கையில் எங்கே போனார் என்ன ஆனார் என்று தெரியவில்லை.

பதின்ம வயது பள்ளி மாணவனுக்கு கூட கஞ்சா விற்கப்படுகிறது என்றால் திமுகவின் ஏவல்துறை எந்தளவிற்கு ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க வேண்டும்? தங்களின் அவல ஆட்சிக்கு எதிராக சமூக வலைதளங்களில் பதிவிடுபவர்கள் மீதும் தங்கள் வாழ்வாதாரத்திற்காகப் போராடுபவர்கள் மீதும் பொய் வழக்கு போடுவதில் மட்டுமே திமுக அரசு அதீத கவனம் செலுத்திக் கொண்டிருந்தால், நமது சமூகக் கட்டமைப்பை அரித்துக் கொண்டிருக்கும் போதைப் பொருட்களை எப்படி ஒழிக்க முடியும்? இப்படிப்பட்ட ஒரு சுயநல ஆட்சியை அகற்றினால் மட்டுமே தமிழகம் நிம்மதிப் பெருமூச்சு விடும்” என்று தெரிவித்துள்ளார்.

 

பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை  வெளியிட்டுள்ள பதிவில்,  , “சென்னை எம்கேபி நகர் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் படித்து வரும் பதினோராம் வகுப்பு மாணவன், பள்ளிக்கு கஞ்சா பொட்டலம் கொண்டு வந்த செய்தி, மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. திமுக ஆட்சியில், கல்வி நிலையங்கள் கூட போதைப் பொருள்களின் புகலிடமாக மாறியிருப்பது, தமிழகத்திற்கே தலைகுனிவு. புத்தகம் வைத்திருக்க வேண்டிய கைகளில், கஞ்சா பொட்டலம் என்பது, வருங்கால சந்ததியினர் எதிர்காலம் குறித்த அச்சத்தையும், கவலையையும் ஏற்படுத்துகிறது.

கஞ்சா போதையில் நடைபெறும் குற்றங்கள், கடந்த நான்கு ஆண்டுகளில், மிக, மிக அதிகரித்துள்ளன. சமீபத்தில், திருத்தணி ரெயில் நிலையத்தில், கஞ்சா போதையில், ஒரு வடநாட்டு இளைஞரை, இளம் சிறுவர்கள் அரிவாளால் வெட்டிய காணொளியை பார்த்தோம். அதன் பிறகாவது, இந்தச் சொரணையற்ற திமுக அரசு, கஞ்சா வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், கஞ்சா வியாபாரிகளுக்கும், கள்ளச்சாராய வியாபாரிகளுக்கும், போதைப்பொருள் வியாபாரிகளுக்கும் திமுகவில் பதவி கொடுத்து அழகு பார்க்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், போதைப் பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்துவார் என்று எதிர்பார்ப்பது தவறுதான்.

அடிப்படை வசதிகள் கூட இல்லாத அரசுப் பள்ளிகளில், தற்போது போதைப்பொருள் புழக்கமும் சேர்ந்து கொண்டிருக்கிறது. பிறகு எப்படி, அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும்? 16 வயது சிறுவனுக்குக் கூட கஞ்சா கிடைக்கும் இடம் தெரிந்திருக்கிறது. சென்னை மாநகரக் காவல்துறைக்கு இன்னும் தெரியவில்லை என்பது எட்டாவது உலக அதிசயம்.

தமிழக பெற்றோர்களுக்கு ஒரு வேண்டுகோள். திமுக ஆட்சியில், நமது குழந்தைகள் எதிர்காலம் மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழகத்தின் எதிர்காலத்தையே நீங்கள் தான் காப்பாற்றியாக வேண்டும். இன்று அரசுப் பள்ளி வரை வந்துவிட்ட கஞ்சா புழக்கம், நம் வீடு வரை வர வெகுநாட்கள் ஆகாது. இந்தக் கையாலாகாத திமுக அரசையோ, அதன் ஏவலாளியாகவே மாறிவிட்ட தமிழக காவல்துறையையோ, இனியும் நம்பி பலனில்லை. குழந்தைகள் எங்கு செல்கிறார்கள், என்ன செய்கிறார்கள், யாருடன் பழகுகிறார்கள் என்பதை தயவுசெய்து உங்கள் நேரடி கண்காணிப்பில் வைத்திருங்கள்.

இந்த போதை மாடல் திமுக ஆட்சி, இனியும் தொடர்ந்தால், தமிழக பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் எதிர்காலம், மிகப்பெரிய கேள்விக்குறி ஆகிவிடும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

[youtube-feed feed=1]