சென்னை: வேளச்சேரி-பரங்கிமலை பறக்கும் ரயில் திட்டம் மார்ச் மாதம் பயன்பாட்டுக்கு வரும் என்று தெரிவித்த தெற்கு ரெயில்வே கூடுதல் பொதுமேலாளர் விபின் குமார், தமிழ்நாடு ரயில்வே திட்டங்களுக்கு பட்ஜெட்டில் ரூ.7611 கோடி ஒதுக்கீடு’ செய்யப்பட்டு உள்ளதாகவும் கூறினார்.
மேலும், தமிழ்நாட்டில் ஏற்கனவே துவங்கி நிறுத்தப்பட்ட கூடுவாஞ்சேரி- ஸ்ரீபெரும்புதூர், மாமல்லபுரம் – கடலூர் ஆகிய ரயில் பாதை பணிகள் மீண்டும் துவங்க பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

மத்திய பட்ஜெட் குறித்து, தெற்கு ரெயில்வே கூடுதல் பொதுமேலாளர் விபின் குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு ரயில்வே திட்டங்களுக்கு ரூ.7611 கோடி மற்றும் கேரளா ரயில்வே திட்டங்களுக்கு ரூ.3795 கோடி என மொத்தம் ரூ.11406 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.
”தமிழக ரயில்வே திட்டங்களுக்கு கடந்த மத்திய பட்ஜெட்டில் 6331 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டில் தமிழ்நாடு ரயில்வே திட்டங்களுக்கு 7611 கோடி ரூபாய், கேரளா ரயில்வே திட்டங்களுக்கு 3795 கோடி ரூபாய் என மொத்தம் 11406 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பல வகையான புதிய மற்றும் அகல பாதை திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்து நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எந்தெந்த திட்டங்களுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு என்ற விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.
தமிழ்நாட்டில் நடைபெறும் புதிய ரயில் பாதை திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்திட தமிழக அரசிடம் தொடர்ந்து பேசி வருகிறோம். எழும்பூர் ரயில் நிலைய வளர்ச்சி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ரயில் தண்டவாளங்களில் நடைமேடைகள் மாற்றப்பட்டு அடுத்தடுத்த பணிகள் நடைபெற்று வருகிறது. எழும்பூர் ரயில் நிலையத்தில் மேற்கொள்ளப்படும் தண்டவாளம், நடைமேடை பணிகள் மே மாதத்திற்குள் முடிக்கப்பட்டு பின்னர் தாம்பரத்துக்கு மாற்றப்பட்ட எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் எழும்பூரில் இருந்து இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
தமிழ்நாட்டில் ஏற்கனவே துவங்கி நிறுத்தப்பட்ட கூடுவாஞ்சேரி- ஸ்ரீபெரும்புதூர், மாமல்லபுரம் – கடலூர் ஆகிய ரயில் பாதை பணிகள் மீண்டும் துவங்க பரிசீலிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
சென்னை கிளாம்பாக்கம் ரயில் நிலையப் பணிகளில் ரயில்வே துறை சார்ந்த பணிகள் முடிந்துள்ளது. ஆனால், ரயில் நிலையத்தில் இருந்து பஸ் நிலையத்துக்கான சாலை, நடைமேம்பாலம் உள்ளிட்ட மாநில அரசு சார்ந்த பணிகள் நடைபெற வேண்டி உள்ளது. அந்த பணிகள் நிறைவடைந்ததும் கிளாம்பாக்கம் ரயில் நிலையம் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். மார்ச் மாதத்திற்குள் பணி முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.
அதுபோல, வேளச்சேரி-பரங்கிமலை பறக்கும் ரயில் திட்டம் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் தெற்கு ரயில்வே சார்பில் ரயில்வே பாதுகாப்பு கமிஷனருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. ரயில்வே பாதுகாப்பு கமிஷனர் இந்த மாதம் ரயில் வழித்தடத்தில் ஆய்வு மேற்கொள்ள உள்ளார். இதனை தொடர்ந்து மார்ச் மாதம் முதல் வாரத்தில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளது”
இவ்வாறு கூறினார்.
[youtube-feed feed=1]