மதுரை: போலீஸ் வாகனம் மீது வெடிகுண்டு வீச்சு உள்பட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ரவுடி அழகுராஜ் என்கவுன்டர் செய்யப்பட்டார். இந்த சம்பவம் பெரம்பலூர் அருகே அரங்கேறி உள்ளது.

மதுரையைச் சேர்ந்த பிரபல ரவுடி அழகுராஜ் (எ) கொட்டு ராஜா மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. கூலிப்படையைச் சேர்ந்தவராகக் கருதப்படும் இவர், சமீபத்தில் போலீஸ் வாகனத்தின் மீது நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதல் சம்பவத்தில் முக்கியக் குற்றவாளியாகத் தேடப்பட்டு வந்தார்.
கடந்த ஜனவரி 24-ஆம் தேதி, பிரபல ரவுடி வெள்ளைக்காளி என்பவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின், போலீசார் அவரை மீண்டும் சென்னை புழல் சிறைக்கு அழைத்துச் சென்றனர். பெரம்பலூர் அருகே உள்ள திருமாந்துறை சுங்கச்சாவடி பகுதியில் வாகனம் சென்றபோது, இரண்டு சொகுசு கார்களில் வந்த மர்ம கும்பல் ஒன்று போலீஸ் வாகனத்தின் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தியது.
ரவுடி வெள்ளைக்காளியைத் தீர்த்துக்கட்டும் நோக்கில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில், ஒரு உதவி ஆய்வாளர் உட்பட மூன்று போலீசார் காயமடைந்தனர். தாக்குதலுக்குப் பிறகு அக்கும்பல் சுங்கச்சாவடி தடுப்புகளை உடைத்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச்சென்றது. இச்சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின.
இந்தத் துணிச்சலான தாக்குதலில் ஈடுபட்டவர்களைப் பிடிக்க 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிரத் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. வாகன எண்களை வைத்து துப்பு துலக்கிய போலீசார், நேற்று அழகுராஜ் மற்றும் அவரது கூட்டாளி ஒருவரைப் பிடித்தனர். கைது செய்யப்பட்ட அழகுராஜை, அவர் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களைக் கைப்பற்றுவதற்காகப் போலீசார் காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்றனர். அப்போது, அழகுராஜ் திடீரென மறைத்து வைத்திருந்த அரிவாளால் அங்கிருந்த போலீசாரைத் தாக்கிவிட்டு தப்பிக்க முயன்றுள்ளார்.
இந்தத் தாக்குதலில் உதவி ஆய்வாளர் சங்கர் காயமடைந்தார். தற்காப்புக்காகவும், குற்றவாளி தப்பிப்பதைத் தடுக்கவும் போலீசார் துப்பாக்கியால் சுட்டனர். இதில் பலத்த காயமடைந்த அழகுராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உயிரிழந்த அழகுராஜின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. காயமடைந்த போலீசார் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கூலிப்படைத் தலைவனாகச் செயல்பட்டு வந்த ரவுடி என்கவுன்டரில் கொல்லப்பட்ட இச்சம்பவம் பெரம்பலூர் மற்றும் மதுரை பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
[youtube-feed feed=1]