சென்னை; முன்னாள் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் பாஜக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் இன்னும் 4 மாதங்களுக்குள் நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாட்டின் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள திமுக அரசு பல்வேறு கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டு வரும் நிலையில், ஆட்சியை கைப்பற்ற அதிமுக தலைமையிலான கட்சிகள் களப்பணியாற்றி வருகின்றன. இதற்கிடையில், தவெக தலைவர் விஜய் ஒரு அணியாகவும், சீமான் மற்றொரு அணியாகவும் இருந்து வருகிறார். இதனால், இந்த முறை 4 முனை போட்டி ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், மக்களுக்கான தேர்தல் அறிக்கை தயாரிப்பில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. ஏற்கனவே திமுக எம்.பி. கனிமொழி தலைமையில், தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு அமைக்கப்பட்டு உள்ளது. மேலும், அதிமுக, தவெக, பாமக என பல அரசியல் கட்சிகள் தேர்தர் அறிக்கை தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த நிலையில், பாஜகவிலும், முன்னாள் கவனரும், மாநில பாஜக முன்னாள் தலைவருமான தமிழிசை சௌந்தரராஜன் தலைமையில் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவை பாஜக தலைமை அறிவித்து உள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு பாஜகவின் எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், ‘தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பில், வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவானது, முன்னாள் மாநிலத் தலைவரும், தேசிய பொதுக்குழு உறுப்பினருமான தமிழிசை சௌந்தரராஜன் தலைமையில் அமைக்கப்படுகிறது.’ எனக் குறிப்பிட்டுள்ளது. இக்குழுவில் மாநிலத் துணைத்தலைவர் துரைசாமி உட்பட 12 பேர் இடம்பெற்றுள்ளனர்.
