சென்னை: தமிழர் திருநாளாம் பொங்கல்பண்டிகையையொட்டி,  மதுரை அலங்காநல்லூரில் நடைபெற உள்ள பாரம்பரியம் மிக்க உலகப்புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை காண அலங்காநல்லூர் செல்கிறேன் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் உலகப்புகழ்பெற்ற  அவனியாபுரத்தில் ஜனவரி 15ம் தேதியும், பாலமேட்டில் ஜனவரி 16ம் தேதியும் உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஜனவரி 17ம் தேதி நடைபெற உள்ளது. இந்த போட்டிகளில் பங்கேற்க  12,000 காளைகள், 5,000 மாடுபிடி வீரர்கள் முன்பதிவு செய்துள்ளனர். ஆன்லைன் மூலம் 12,000க்கும் மேற்பட்ட காளைகள், 5,000க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் முன்பதிவு செய்துள்ளனர்.

இந்த போட்டிகளை காண தமிழ்நாடு மட்டுமின்றி உலகம் முழுவதும் இருந்து சுற்றுலா பயணிகள் மதுரையில் குவிந்து வருகின்றனர். இந்த நிலையில், மதுரை அலங்கா நல்லூரில் வரும் 17ந்தேதி நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை காண மதுரை செல்வதாக முதல்வர் ஸ்டாலின்,  திமுகழக உடன்பிறப்புகளுக்கு எழுதிய பொங்கல் வாழ்த்து மடலில் தெரிவித்து உள்ளது.

தமிழர் திருநாள் பொங்கலையொட்டி, உடன்பிறப்புகளுக்கு தி.மு.கழகத் தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து மடல் வெளியிட்டுள்ளார். அதில் ,  தை முதல்நாள் தமிழர் வாழ்வில் சிறப்புமிக்க நாள். இல்லங்களிலும் உள்ளங்களிலும் இன்பம் பொங்கிடும் பொங்கல் விழா தொடங்குகிற நன்னாள். உழைப்பைப் போற்றுகின்ற திருநாள். தமிழ்ப் பண்பாட்டை உலகம் அறிந்திடும் வகையில் மகிழ்ச்சியான கலை, பண்பாட்டு நிகழ்வுகளும் பாரம்பரியமிக்க விளையாட்டுப் போட்டிகளுமாகக் கொண்டாடப்படுகிற நாள். அந்த மகிழ்ச்சி இந்த ஆண்டில், இன்னும் கூடுதலாக இருப்பதை தமிழ்நாடு முழுவதும் காண முடிகிறது.

கடந்த 5 ஆண்டுகால திராவிட மாடல் ஆட்சியில் இயற்கையும் அரசு நிர்வாகமும் பருவம் தவறாமல் பணி செய்ததன் விளைவாக, விளைநிலங்கள் செழித்து, உழவர்களுடைய உழைப்பின் விளைச்சலையும், அதற்குரிய பலன்களையும் அதிகமாக்கியிருப்பதால் அவர்களின் நெஞ்சத்தில் மகிழ்ச்சி பொங்குகிறது. இயற்கை சீற்றங்கள் ஏற்பட்ட போதும், விவசாயிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் துணையாகவும் அரணாகவும் நின்றது உங்களில் ஒருவனான என் தலைமையிலான திராவிட மாடல் அரசு.

தமிழ் இனத்தின் பண்பாட்டுப் பெருமைகளில் ஒன்றான, ஜல்லிக்கட்டு எனப்படும் ஏறுதழுவுதல் நிகழ்வைப் பார்ப்பதற்கு உங்களில் ஒருவனான நான், உங்களால் தமிழ்நாட்டு முதலமைச்சரான நான் ஜனவரி 17-ஆம் நாள் அதாவது, தை மாதம் 3-ஆம் நாள் மதுரை அலங்காநல்லூருக்கு நேரில் செல்கிறேன். அந்த அலங்காநல்லூரில் உலகத்தரத்திலான ஏறுதழுவுதல் அரங்கத்தை நம் உயிர்நிகர் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் பெயரில் அவரது நூற்றாண்டு நினைவாக அமைத்துத் திறந்ததும் நமது திராவிட மாடல் அரசுதான்.

இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

[youtube-feed feed=1]