சென்னை: தவெக தலைவர் விஜயின் கருர் பிரசாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவத்தில், விஜய் இன்று டெல்லியில் சிபிஐ விசாரணைக்கு ஆஜராகிறார். இது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியான விவகாரத்தில், தவெகவினர் திமுக குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த விவகாரத்தை நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு மாற்றி விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணையின் தொடர்ச்சியாக, இன்று (ஜனவரி 12ந்தேதி) விசாரணைக்கு ஆஜராக விஜய்க்கு சிபிஐ சம்மன் அனுப்பியது. அதன்படி, தவெக தலைவர் விஜய் இன்று டெல்லியில் சிபிஐ முன் ஆஜராகிறார். இதையடுத்து அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதற்காக அவர் சென்னையில் இருந்து அதிகாலை டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வந்தார். அதன் தொடர்ச்சியாக கடந்த ஆண்டு (2025) செப்டம்பர் 27ம் தேதி அவர் கரூர் மாவட்டத்தில் பரப்புரை மேற்கொள்ள சென்றிருந்தார். மதியம் 2 மணிக்கு பரப்புரை நடந்த வேலுசாமிபுரத்திற்கு வருகை தருவதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் கூட்ட நெரிசல் காரணமாக விஜய் இரவு 7 மணிக்கு மேல் தான் சம்பவ இடத்திற்கு செல்ல முடிந்தது. இந்த விஷயத்தில் அரசியல் விளையாடியதாக கூறப்படுகிறது.
பின்னர் கரூர் வேலுச்சாமிபுரத்தில் உரையை பேசி முடித்த சில நிமிடங்களில் சுற்றியிருந்த தொண்டர்கள் மத்தியில் திடீரென தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தை முதல் பெரியவர்கள் வரை சுமார் 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நாடு முழுவதும் இந்த சம்பவம் பெரும் கொந்தளிப்பையும், அதிர்ச்சியையும் உண்டாக்கியது. இந்த சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு அரசு சார்பில் ஒரு நபர் விசாரணை ஆணையம், சிறப்பு புலனாய்வுப் படை ஆகியவை அமைக்கப்பட்டது.
ஆனால் கரூர் சம்பவம் ஒரு திட்டமிட்ட சதி என்றும், இதுதொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என தவெக சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட்டது. இதற்கிடையில் கரூரில் பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்தினரை நேரில் வரவழைத்து விஜய் மன்னிப்பு கேட்டார். மேலும் தவெக சார்பில் அவர்களுக்கு நிதியுதவியும் வழங்கினார். அதுமட்டுமல்லாமல் இந்த விவகாரத்தில் அவர் தமிழ்நாடு அரசையும், முதலமைச்சர் ஸ்டாலினையும் நேரடியாக குற்றம் சாட்டியது பெரும் பரபரப்பை உண்டாக்கியது.
கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். டெல்லியில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளான ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, சி.டி.நிர்மல் குமார் என அனைவரையும் விசாரணை நடத்தினர். தொடர்ந்து கரூர் வேலுசாமி புரத்தில் பரப்புரை மேற்கொண்ட இடத்திற்கு சென்ற அதிகாரிகள் அங்கு டேப் வைத்து அனைத்து இடங்களையும் அளந்தனர்.
அதேபோல் விஜய் பரப்புரை மேற்கொண்ட வாகனமும் ஆய்வு செய்யப்பட்டு இன்ச், இன்சாக அளவீடு செய்யப்பட்டு குறித்துக் கொள்ளப்பட்டுள்ளது. அதில் பொருத்தப்பட்டிருந்த கேமராக்களின் காட்சிகளையும் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
இந்த நிலையில் கரூர் சம்பவம் தொடர்பான விசாரணைக்கு தவெக தலைவர் விஜய் இன்று ஆஜராகிறார். அவருக்கு கடந்த வாரம் இதற்கான சம்மன் அனுப்பப்பட்டது. இதற்காக காலையில் சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி செல்லும் அவர் நாளை (ஜனவரி 13) மாலை மீண்டும் சென்னை திரும்புவார் என சொல்லப்படுகிறது. சிபிஐ அதிகாரிகள் முன் விஜய் என்ன மாதிரியான கருத்துகளை சொல்லப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதனிடையே விஜய் டெல்லியில் இறங்குவது முதல் அவர் மீண்டும் சென்னை திரும்புவது வரை உரிய பாதுகாப்பை டெல்லி காவல்துறை வழங்கவுள்ளது.
[youtube-feed feed=1]