சென்னை: நாளை (ஜனவரி 9ந்தேதி)  கடலூரில் தே.மு.தி.க. மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0  நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில், தேமுதிக  எந்த அணியுடன்  கூட்டணி அறிவிப்பை  பிரேமலதா விஜயகாந்த் வெளியிடுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தேமுதிக சார்பில் மக்கள் உரிமை மீட்பு மாநாடு ஜனவரி 9ம் தேதி கடலூர் பாசார் கிராமத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் நடைபெற உள்ளது. இதற்காக  சுமார் 150 ஏக்கரில் மாநாட்டு பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.   மாநாட்டில்,  பரத நாட்டிய குழுவினரின் நிகழ்ச்சி, கிராமிய கலைக்குழு நிகழ்ச்சி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது. இந்த மாநாட்டிற்கு கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமை தாங்கி, சிறப்புரையாற்றுகிறார்.

மாநாட்டின் நிகழ்ச்சி நிரலை தேமுதிக தலைமை கழகம்  வெளியிட்டது.  அன்படி, நாளை  மதியம் 2.45 மணிக்கு மாநாட்டு திடலில் தேமுதிக  கட்சி கொடி ஏற்றுதல் நிகழ்ச்சி நடக்கிறது.  கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மாநாட்டு திடலில் கட்சி கொடியை ஏற்றி வைக்கிறார்

மாலை 3.23 மணிக்கு பரத நாட்டியம் (டாக்டர் சுகந்தி), மாலை 3.28 மணிக்கு கேப்டனை பற்றிய கவிதை (மோனிகா ஸ்ரீ), மாலை 3.40 மணிக்கு கேப்டனின் சாதனை இன்னும் நிலைத்து இருக்க காரணம் சினிமாவா? அரசியலா? (பட்டிமன்றம்), மாலை 4.40 மணி கலை குழு நாராயணன் நடனம், மாலை 4.45 மணி பரத நாட்டியம் குழு (ஜெகதீஸ்வரி சசிதரன்), மாலை 4.55 மணி கிராமிய கலைமணி கே.பி.தங்கவேல் தப்பாட்டக் கலைக்குழு நிகழ்ச்சி, மாலை 5.10 மணி கானா பாலா பாடும் பாடல், மாலை 5.20 மணி கலை குழு நாராயணன் நடனம். மாலை 5.25 பவித்ரா பாடல், மாலை 5.30 மணி கலை குழு நாராயணன் நடனம், மாலை 5.35 மணி செந்தில் ராஜலெட்சுமி பாடல் கச்சேரி, மாலை 5.55 மணி பொட்டு வச்ச தங்கக்குடம் நடனம் பாடல் (கலை குழு நாராயணன்), மாலை 6 மணி கேப்டன் தோற்றம் போல் நடனம் (கலை குழு நாராயணன்) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்பிறகே மாலை 6மணிக்கு தேமுதிக  பொதுச்செயலாளர் பிரேமலதா தலைமையில் மாநாடு தொடங்குகிறது. இந்த மாநாட்டில் அரசியல் நிலவரம், தேர்தல் கூட்டணி, தொகுதி பங்கீடு குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. அதன்பிறகு பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட  உள்ளதுடன், வர இருக்கும் சட்டமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பு வெளியிடுவார் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

[youtube-feed feed=1]