சென்னை: சென்னை இந்த புத்தாண்டு மழையுடன் பிறந்துள்ளது. அதனால், இந்த ஆண்டு செழிப்பாக இருக்கும் என பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். சென்னையில் நள்ளிரவில் கொட்டிய கனமழையுடன் புத்தாண்டான 2026 புத்தாண்டை பொதுமக்கள் ஆரவாரமாக வரவேற்றுள்ளனர்.

நாடு முழுவதும் 2026 ஆங்கில புத்தாண்டு பிறந்துள்ளது. இந்த புத்தாண்டை உலக மக்கள் ஆட்டம் பாட்டத்துடன் வரவேற்றுள்ளனர். தமிழ்நாட்டில், புத்தாண்டை வரவேற்கும் விதமாக பெண்கள், தங்களது வாசல்களில் வண்ணக் கோலமிட்டும், இரவுநேரங்களில் கோவில்கள், சர்ச்சுகளுக்கு சென்றும் வரவேற்றனர். இதற்கிடையில், நேற்று (டிசம்பர் 31ந்தேதி) இரவு 11 மணி முதல் பரவலாக மழை பெய்யத் தொடங்கியது. இரவு நேரங்களில் கோவிலுக்கும், சர்ச்சுக்கும் செல்லவிருந்தவர்கள் இதனால் சற்று தயங்கியபடியே கையில் குடையுடன் சென்றனர்.
இரவு 11 மணிக்கு தூறலுடன் தொடங்கிய மழை போகப்போக சற்று அதிகமாகவே பெய்யத் தொடங்கியது. சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்தது. சில இடங்களில் கனமழையும் கொட்டியது. இதனால், புத்தாண்டை வரவேற்கும் விதமாக பொதுமக்கள் தங்களது வீடுகள் முன்பு போட்டிருந்த கோலம் அழிந்தது. இதை கண்ட பெண்கள் சோகமடைந்தனர். இருந்தாலும், புத்தாண்டு மழையுடன் பிறப்பதால், இந்த ஆண்டு தண்ணீருக்கு தட்டுப்பாடு ஏற்படாது, மாநிலம் செல்வ செழிப்பாக இருக்கும் என்று தங்களைத்தாங்களே சமாதானப்படுத்திக்கொண்டனர்.
2025ம் ஆண்டு கழிந்து புதிதாக பிறந்த புத்தாண்டான 2026ஐ இயற்கை மைழையுடன் வரவேற்றுள்ளதாக நினைத்து, பொதுமக்களும் மழையை உற்சாகமாக வரவேற்றனர்.
முன்னதாக வானிலை மையம் வெளியிட்ட் அறிக்கையில், “இலங்கை கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி, நேற்று நள்ளிரவு மாநிலத்தின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, புதுக்கோட்டை, மதுரை, தேனி, தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்” என்று வானிலை மையம் தெரிவித்து இருந்தது. அந்த வகையிலேயே சென்னையை தாண்டி பல்வேறு மாவட்டங்களிலும் நள்ளிரவில் மழை பொழிந்துள்ளது.
இதற்கிடையில், சென்னை வானிலை மையம் இன்று (ஜனவரி 1) அதிகாலை வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பின்படி, ” அடுத்த 3 மணி நேரத்தில் அதாவது காலை 7 மணி வரையில், செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை ஆகிய இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அடுத்த 3 மணி நேரத்தில் திண்டுக்கல், கரூர், நாமக்கல் ஆகிய இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது” என எச்சரிக்கப்பட்டுள்ளது.
[youtube-feed feed=1]