சென்னை: தமிழ்நாட்டில் நடப்பாண்டு வடகிழக்கு பருவமழை இயல்பை விட 3% குறைவாக பெய்துள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது.

இந்தியாவில் ஜூன் 1-ந் தேதி முதல் செப்டம்பர் 30-ந் தேதி வரை பெய்யும் மழை தென்மேற்கு பருவ மழையாகவும், அக்டோபர் 1-ந் தேதி முதல் டிசம்பர் 31-ந் தேதி வரை பெய்யும் மழை வடகிழக்கு பருவ மழையாகவும் பதிவு செய்யப்படுகிறது. நடப்பாண்டு, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை, அக்டோபர் 15ந்தேதி தொடங்கியது. இதை வானிலை ஆய்வு மையம் உறுதி செய்தது.
இந்த நிலையில், நடப்பாண்டு இதுவரை வடகிழக்கு பருவமழை இயல்பை விட 3% குறைவாக பெய்துள்ளது என தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் ஒரு மாதம் வரை பரவலாக மிதமானது முதல் கனமழை வரை கொட்டியது. இதனால் நீர்நிலைகள் நிரம்பியது. ஆனால், அதன்பிறகு மழை பெய்வது குறைந்து குளிர்காற்று வீசத்தொடங்கியது.
இந்த நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் வடகிழக்கு பருவமழை தற்போது வரை இயல்பை விட 10% சதவீதம் குறைவாக பெய்துள்ளது. சென்னையில் இயல்பான நிலையில் 809 மி.மீ. மழை பொழியும் நிலையில் தற்போது வரை 724 மி.மீ. மட்டுமே பெய்துள்ளது. வடகிழக்கு பருவமழை கணக்கீடு இன்றுடன் நிறைவு பெற்ற நிலையில் பருவமழை குறைந்துள்ளது.
நெல்லை மாவட்டத்தில் அதிகபட்சமாக 95% சதவீதம் இயல்பை விட கூடுதலாக பருவமழை பெய்துள்ளது.
குறைந்தபட்சமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 35% சதவீதம் இயல்பை விட குறைவாக பருவமழை பெய்துள்ளது.
10 மாவட்டங்களில் இயல்பை விட அதிகமாகவும், 27 மாவட்டங்களில் இயல்பை விட குறைவாகவும் பருவமழை பெய்துள்ளது.
வடகிழக்கு பருவமழை இவ்வாண்டு இயல்பை விட கூடுதலாக பெய்யும் என்று வானிலை மையம் கணித்திருந்த நிலையில் குறைவாக பதிவாகியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் 24%சதவீதமும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 23% சதவீதமும், கரூரில் 28% சதவீதமும் பருவமழை குறைவாக பெய்துள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் 30 சதவீதம், சேலம், கிருஷ்ணகிரி, திருப்பூரில் 26%சதவீதம், திருச்சி மாவட்டத்தில் 21%சதவீதம் பருவமழை குறைந்துள்ளது.
இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
[youtube-feed feed=1]