சென்னை: நாடு முழுவதும் இன்று வைகுண்ட ஏகாதசி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, பிரபல கோவில்களான திருப்பதி, ஸ்ரீரங்கம், திருவல்லிக்கேணி உள்பட நாடு முழுவதும் உள்ள பெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. பக்தர்கள் சொர்கவாசல் வழியாக சென்று எம்பெருமாளின் அருள்பெற்று வருகின்றனர்.

மார்கழி மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசி, வைகுண்ட ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது. இந்த நாளின் மிக முக்கியமான நிகழ்வு விஷ்ணு ஆலயங்களில் நடைபெறும் சொர்க்கவாசல் எனப்படும் பரமபத வாசல் திறப்பு ஆகும். இந்த நாளில் வைகுண்டத்தின் கதவுகள் திறந்திருப்பதாகவும் அதன் வழியே சென்றால் மறுபிறவி இருக்காது என்பதும் நம்பிக்கை.
அதன்படி இன்று (டிசம்பர் 30), அதிகாலை பெருமாள் திருத்தலங்களில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. தமிழகத்தில் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் உள்ளிட்ட முக்கிய பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. அதேபோல் திருப்பதி ஏழுமலையான் கோவில்களிலும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. வாசல் வழியாக கடந்து சென்று ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

திருப்பதி ஏழுமலையான் கோவில்
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நள்ளிரவு 1.30 மணிக்கு கோயிலின் வெளிப்புறத்தில் உள்ள சொர்க்க வாசல் திறக்கப்பட்டு, பூஜைகள் நடத்தப்பட்டன. இதன்பின் பக்தர்கள் சொர்க்க வாசலில் அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து கோவிந்தா முழக்கத்துடன் பக்தர்கள் சுவாமி தரிசனம் மேற்கொண்டனர். அதேபோல் சொர்க்க வாசலில் விதவிதமான மலர் அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன. ஏழுமலையானின் கற்ப கிரக சன்னதிக்கு ஒட்டியபடி பக்தர்கள் சொர்க்க வாசல் வழியே உள்ளே சென்று உண்டியல் வைக்கப்பட்டுள்ள இடத்தில் இருந்து வெளியே வருகின்றனர். அதேபோல் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு கோயிலுக்கு வெளியே அஷ்ட லட்சுமி அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இதனால் இரவு நேரத்தில் திருப்பதி கோயிலே ஜொலிக்கிறது.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில்
பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் கடந்த டிசம்பர் 19 ஆம் தேதி தொடங்கியது.இன்று(டிசம்பர் 30) காலை 5.45 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. நம் பெருமாள் பாண்டியன் கொண்டை, கிளிமாலை, ரத்தின அங்கி அலங்காரத்தில் பரமபத வாசலை கடந்து எழுந்தருளினார். அப்போது அங்கு குழுமியிருந்த பக்தர்கள் ரங்கா.. ரங்கா.. கோஷத்துடன் சொர்க்கவாசலை கடந்தனர்.
இன்று ராப்பத்து எனப்படும் திருவாய்மொழி திருநாள் தொடங்குகிறது.

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில்
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில், இன்று அதிகாலை 4:30 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.பரமபத வாசல் என்னும் சொர்க்க வாசல், இன்று காலை திறக்கப்பட்டது. பரமபத வாசலில் பார்த்தசாரதி பெருமாள் எழுந்தருளி நம்மாழ்வாருக்கு எதிர்சேவையில் காட்சித் தந்தார். எதிர்சேவையில் காட்சி தந்த பார்த்தசாரதி பெருமாளை, கோவிந்தா… கோவிந்தா… என்ற முழக்கத்துடன் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
வைகுண்ட ஏகாதசியை ஒட்டி, பார்த்தசாரதி கோவிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து, பெருமாளை தரிசித்து சென்றனர். இதையொட்டி, பக்தர்களின் வசதிக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. கோவிலை சுற்றிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. கோவிலை சுற்றி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. மருத்துவ வசதிகளும் செய்யப்பட்டு உள்ளது.
பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு
தமிழக முழுவதும் உள்ள பெருமாள் கோவில்களிலும், வெகு சிறப்பாக சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்து வருகிறது. மதுரை, தல்லாகுளம் அருள்மிகு பிரசன்ன வெங்கடாசலபதி கோவில் உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள அனைத்து வைணவ திருத்தலங்களிலும், நடந்த சொர்க்க வாசல் திறப்பு நிகழ்வில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, பெருமாளை தரிசனம் செய்து வருகின்றனர்.
[youtube-feed feed=1]