16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கும் வகையில், ஆஸ்திரேலியாவைப் போன்று சட்டம் கொண்டு வர வேண்டும் என மத்திய அரசுக்கு மதுரை உயர்நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது.
குழந்தைகள் எளிதில் ஆபாச உள்ளடக்கங்களை அணுக முடிவது குறித்து மதுரையைச் சேர்ந்த எஸ். விஜயகுமார் என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜி. ஜெயச்சந்திரன் மற்றும் கே.கே. ராமகிருஷ்ணன் ஆகியோர் கொண்ட அமர்வு இதைத் தெரிவித்துள்ளது.

இணைய சேவை வழங்குநர்கள் (ISPs) பெற்றோர் கட்டுப்பாடு (Parental Control) வசதி வழங்க வேண்டும் என்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் மனுதாரர் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
மேலும், “ஆஸ்திரேலியாவில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தின் கீழ், 16 வயதுக்குக் குறைந்தவர்கள் சமூக ஊடக கணக்குகள் தொடங்கக் கூடாது.
ஆனால், குழந்தைகளுக்கோ பெற்றோர்களுக்கோ தண்டனை இல்லை. இந்த விதியை மீறும் சமூக ஊடக நிறுவனங்களுக்கு கடும் அபராதம் விதிக்க சட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளது” என்பதை மேற்கோள்காட்டி இதேபோன்ற சட்டம் இந்தியாவில் அவசியம் என்றும் வலியுறுத்தினார்.
இதுகுறித்து பதிலளித்த இணைய சேவை வழங்குநர்கள் தரப்பில், தாங்கள் தகவல் தொழில்நுட்ப சட்டம் மற்றும் 2021 IT விதிகள் அடிப்படையில் செயல்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
புகார் வந்தால், ஆபாச அல்லது எதிர்ப்பு உள்ளடக்கங்கள் உள்ள இணையதளங்கள் மூடப்படுவதாக நீதிமன்றத்தில் கூறப்பட்டது.
2018 ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட இந்த பொது நல வழக்கு விசாரணையை முடித்து வைத்த நீதிபதிகள், “குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு சட்டம், 2005-ன் கீழ், மாநில மற்றும் மத்திய குழந்தைகள் உரிமைகள் ஆணையங்கள் தங்களுக்கான பொறுப்புகளை முறையாக நிறைவேற்றவில்லை” என்று கவலை தெரிவித்தனர்.
“ஆஸ்திரேலியா போன்று சட்டம் கொண்டு வருவதற்கான சாத்தியங்களை மத்திய அரசு ஆய்வு செய்யலாம். அத்தகைய சட்டம் வரும்வரை, குழந்தைகள் மற்றும் பெற்றோர்களிடையே விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டும். அனைத்து ஊடகங்களையும் பயன்படுத்தி பாதிக்கப்படக்கூடிய குழுக்களை சென்றடைய வேண்டும்,” என நீதிமன்றம் தெரிவித்தது.
அதிகாரிகள் தாக்கல் செய்த பதில் திருப்தி அளிக்கவில்லை என்று கூறிய நீதிமன்றம், பள்ளி அளவில் நடக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் போதுமானவை அல்ல என்றும் குழந்தைகள் உரிமைகள் குறித்து சமூகமெங்கும் விழிப்புணர்வு தேவை என்றும் குறிப்பிட்டது.
குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோக உள்ளடக்கம் (CSAM) கொண்ட இணையதளங்கள் இன்னும் செயல்பாட்டில் உள்ளதாகச் சுட்டிக்காட்டிய நீதிமன்றம் “குழந்தைகள் பயன்படுத்தும் சாதனங்களில் பெற்றோர் கட்டுப்பாடு செயலிகள் கட்டாயம் இருக்க வேண்டும்.
குழந்தைகளின் பாதுகாப்பில் பெற்றோரின் பொறுப்பு மிக அதிகம்,” என நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும், குழந்தைகள் மீது நடைபெறும் பாலியல் வன்முறை தொடர்பான வழக்குகளில் உச்சநீதிமன்றம் ஏற்கனவே பரிந்துரைகள் வழங்கியுள்ளதால், விரிவான உத்தரவை வழங்க மறுத்ததுடன் இந்த மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
[youtube-feed feed=1]