சென்னை: மத்தியஅரசு 100 நாள் வேலை திட்டத்தின் பெயர் மாற்றம் செய்துள்ளதை கண்டித்து, திமுக உள்பட கூட்டணி கட்சிகள் இன்று மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கி.வீரமணி, வைகோ, திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் என்ற 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் கோடிக்கணக்கான கிராம மக்கள் பயன் அடைந்து வந்தார்கள். கிராமப்புறத்தில் ஒவ்வொரு குடும்பத்தில் இருந்தும் 18 வயது நிரம்பிய ஒருவருக்கு ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் 100 நாட்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவது சட்டப்படி உரிமையாக்கப்பட்டது.
தற்போது அந்த திட்டத்தின் பெயரை மாற்றி, ‘விக்ஸித் பாரத் ஜி ராம் ஜி’ என்று பெயரிடப்பட்டு உள்ளது. மேலும், வேலைநாட்கள் 100 நாட்களுக்கு பதிலாக 125 நாட்களாகவும், குறைந்த பட்ச ஊதியமாக ரூ. 240 ஆகவும் உயர்த்தியும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தில் இருந்து காந்தி பெயர் நீக்கப்பட்டு உள்ளதற்கு காங்கிரஸ், திமுக உள்பட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன.
இந்த நிலையில், இன்று மாநிலம் முழுவதும் அண்ணல் காந்தியடிகள் பெயரை நீக்கி 100 நாள் வேலைத்திட்டத்தை ஒழிக்கும் சட்டத்தை கொண்டு வந்த மத்திய பா.ஜ.க. அரசையும், ஒத்து ஊதும் அ.தி.மு.க.வையும் கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் மாநிலம் முழுவதும் 400 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
சென்னை மேடவாக்கத்தில் 100 நாள் வேலை திட்டத்தை ஒழிக்கும் சட்டத்தை கொண்டு வந்த மத்திய அரசை கண்டித்தும், விபி-ஜி ராம் ஜி சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும் தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கி.வீரமணி, வைகோ, திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில், 100 நாள் வேலை இனி இல்லை என முழக்கமிட்டனர். மத்திய அரசின் சட்டத்தை அ.தி.மு.க. ஆதரிப்பதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
[youtube-feed feed=1]